5வது தடவையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ்

0
96
Article Top Ad

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டியில் கடந்தாண்டு சம்பியன் குஜராத் டைடான்ஸ் அணியைத் தோற்கடித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது.

2010ம் 2011ம் ஆண்டுகளிலும் பின்னர் 2018 மற்றும் 2021ம் ஆண்டுகளிலும் சம்பியன் பட்டம் வென்றிருந்த சென்னை அணி கைப்பற்றிய ஐந்தாவது சம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டில் சம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி குறித்து பெரும் எதிர்பார்ப்பு இம்முறை இருந்தபோதும் கடந்த ஆண்டு 9வது இடம்பிடித்த சென்னை அணி குறித்து பெரிய எதிர்பார்ப்புக்கள் இருக்கவில்லை. முன்னாள் கிரிக்கட் வீரர்களும் பெரும் நம்பிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கவில்லை . ஆனாலும் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை அணி கடும் சவால்களுக்கு மத்தியில் தனக்கே உரித்தான பாணியில் மீண்டுமாக சம்பியன் பட்டம் வென்று சாதனை நிகழ்த்தியது.

 

2019ம் ஆண்டில் மும்பை அணிக்கெதிரான இறுதிப்போட்டியின் போது ஒரு கட்டத்தில் பலமான நிலையில் இருந்து பின்னர் கடைசிப் பந்தில் இரண்டு ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோல்வியடைந்து ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்திய சென்னை அணி இம்முறை இறுதிப்போட்டியிலும் வலுவான நிலையைத் தாரை வார்த்துவிடுமோ என்ற அச்சம் எழுந்தபோதும் கடைசி இரண்டு பந்துகளிலும் சிக்ஸரும் ஃபோருமாக பத்து ஓட்டங்களைக் குவித்து ரவீந்திர ஜடேஜா வெற்றியை உறுதிசெய்தார்.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி தமிழக வீரர் சாய் சுதர்சனின் சிறப்பான 96 ஓட்டங்களுடன் 214 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்த மழை குறுக்கிடவே போட்டி ஐந்து ஓவர்களால் குறைக்கப்பட்டு 15 ஓவர்களில் 170 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பதிலளித்தாடிய சென்னை அணி ஆரம்ப வீரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட், டெவோன் கொன்வே, சிவம் டூபே, அம்பதி ராயுடு ,அஜிங்கா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்புடன் வெற்றியை உறுதிசெய்தது.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக டெவோன் கொன்வே தெரிவானார்.

இறுதிப்போட்டியில் வெற்றியை உறுதிசெய்த ஜடேஜாவை தலைவர் டோனி கட்டித்தழுவித் தூக்கியமை மறக்கமுடியாத காட்சியாக அமைந்தது. இதனையடுத்து கருத்துவெளியிட்ட டோனி உண்மையாக பார்த்தால் தற்போது அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுவதே தகும். ஆனால் ரசிகர்கள் காண்பித்த அன்பைப் பார்க்கும் போது இன்னுமொரு தடவை வந்து அவர்களுக்காக ஆடவேண்டும் அதுவே தனது பரிசாக இருக்கும் என்று தெரிவித்தார்.