ஜனாதிபதியின் காணி குறித்த கலந்துரையாடல் தகவல்கள் ‘ஊடகங்களுக்கு குழப்பம்’

0
60
Article Top Ad

வடக்கின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்த தகவல்களை ஊடகவியலாளர்கள் குழப்பிக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்திய இலங்கை ஜனாதிபதி செயலகம் “தொல்லியல் சக்கரவர்த்தி” என்ற பெயருடன் எழுப்பப்பட்ட கேள்விக்கு குழப்பமான பதிலை வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரைக்கு சொந்தமான “அரசாங்க காணியை” ஏனையோருக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏகநாயக்க கடந்த இன்றைய தினம் (ஜுன் 15) எல்லாவல மேதானந்த தேரருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

எல்லாவல மேதானந்த தேரர், கடந்த ஜூன் 13ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கையெழுத்தில் அனுப்பிய கடிதத்தில் , குருந்தூர்மலை விகாரைக்கு சொந்தமான அரச காணிகள் தொடர்பில் அல்ல, மாறாக “குருந்தூர்மலை விகாரைக்கு சொந்தமில்லாத காணியை” பொதுமக்களுக்கு  வழங்குவது தொடர்பிலேயே குறிப்பிட்டிருந்தார்.

“குருந்தி விகாரைக்கு சொந்தமில்லாத காணிகளை பொதுமக்களிடம் கையளிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியக்கிடைத்தது. குருந்தி விகாரையைச் சுற்றிலும் பல்வேறு பௌத்த விகாரைகளின் இடிபாடுகள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. எனவே, இந்த காணிகளை பகிர்ந்தளிப்பது ஏற்புடையதல்ல”

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு, குருந்தூர்மலை தொல்பொருள் இடமானது ஜனாதிபதி செயலகத்தினால் “குருந்தி விகாரை” என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, குருந்தூர்மலை, தன்னிமுறிப்பில் கடந்த காலத்தில் தமிழ் பௌத்த விகாரை இருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் தனது பதவியை இராஜினாமா செய்த தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்துடன் நடத்திய கலந்துரையாடலில் குறிப்பிட்டிருந்தார்.

“08.06.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் குருந்தி விகாரை மற்றும் திரியாய பிரதேசத்தின் இடிபாடுகள் குறித்தும் பேசப்படடதோடு,  ஊடகங்கள் இந்த விடயத்தை ஒளிபரப்பியதில் குழப்பிக்கொண்டுள்ளதாக தெரிகிறது.” என ஜனாதிபதி செயலகம் கூறினாலும் ஊடகங்கள் குழம்பிப்போன “அந்த விடயங்கள்” என்ன என்பது குறித்து அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஜுன் 12ஆம் திகதி, கலந்துரையாடல் முடிந்து நான்கு நாட்களுக்குப் பின்னர், ஜுன் 8ஆம் திகதி   நடைபெற்ற கூட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான 06 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட செம்மைப்படுத்தப்பட்ட காணொளியின் உதவியுடன் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஒருவாரம் கடந்தும், செம்மைப்படுத்தப்படாத காணொளியையோ, எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலோ ஊடகங்களுக்கு தகவல் வழங்கி, “ஊடகங்கள் குழப்பிக்கொண்ட விடயத்தை” தெளிவுபடுத்த அரசாங்கமோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ நடவடிக்கை எடுக்கவில்லை.