இலங்கை – இந்திய உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்குமா ஜனாதிபதியின் விஜயம்?

0
64
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றுநாள் உத்தியோகப்பபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகப்பூர்வ விஜயமும் இதுதான்.

இலங்கையில் கடந்த சில தசாப்தங்களாக தெரிவாகிய ஜனாதிபதிகள் தமது முதல் உத்தியோகப்பூர்வ விஜயங்களை இந்தியாவுக்கே மேற்கொண்டு வந்தனர்.

ஆனால், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகியிருந்த சந்தர்ப்பத்தில் நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் உக்கிரமடைந்திருந்ததால் அரசமுறை பயணங்களை அவர் ஒத்திவைத்திருந்தார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மரண சடங்கில் கலந்துகொண்டமையே ஜனாதிபதியின் முதல் உத்தியோகப்பூர்வ விஜயமாக அமைந்திருந்தது.

அரசுமுறை பயணத்தை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்திருந்திராத போதிலும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முதலில் நேசகரம் நீட்டியது இந்தியாதான்.

கடந்த ஒருவருடத்தில் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா இலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் வழங்கியுள்ளது. அதற்கு அப்பால் பல்வேறு பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்கியது.

இலங்கையில் அமையபெறும் அரசாங்ககங்கள் இந்தியாவுடன் எப்போதும் சுமூகமான உறவை பேணுவதையே விரும்புகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டு பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட தருணத்திலும் இந்தியாவுடன் சுமூகமான உறவை வளர்த்துக்கொள்ள முற்பட்டிருந்தார்.

அதேபோன்று, 2015ஆம் ஆண்டு அவர் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டிருந்த தருணத்திலும் இந்தியாவுக்கே முதல் விஜயத்தை மேற்கொண்டதுடன், இந்தியாவுடன் பல்வேறு உடன்படிக்கைகளையும் கைச்சாத்திட முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகளை இலகுவாக்கும் “எட்கா“ உடன்படிக்கையை கைச்சாத்திட அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீரவின் ஊடாக ரணில் விக்ரமசிங்க பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் அந்த நடவடிக்கையை கைவிட்டிருந்தார்.

பொருளாதார ரீதியாக இலங்கைக்கு பல நன்மைகளை பெற்றுக்கொள்வதை நோக்கமாக கொண்டதாக ரணில் விக்ரமசிங்கவின் விஜயம் அமைந்திருந்தாலும் மறுபுறம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மோடி அவருக்கு கூறபோகும் செய்திகளும் அவதானம் மிக்கதாக மாறியுள்ளது.

13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்ற தீர்வுத் திட்டத்திற்காக பிரதமர் மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வடக்கின் தமிழ் கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதங்களை அனுப்பியுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இன்று அவசரக் கடிதமொன்றை மோடிக்கு அனுப்பியுள்ளார்.

இக்கடிதத்தில், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான இந்தியாவின் காத்திரமான அழுத்தம் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை நிச்சயமாக மோடிக்கும் ரணிலுக்கும் இடம்பெற போகும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் தீர்மானமிக்கதாக அமையும். பிரதமர் மோடியும் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பாரென வடக்கின் தமிழ் கட்சிகள் நம்புவதால்தான் தமது கோரிக்கை கடிதங்களையும் அனுப்பியுள்ளன.

எட்கா பேசுபொருளாகுமா?

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பொருளாதார மற்றும் கலாசார ரீதியான பல ஒப்பந்தங்கள் புதிதாக கையெழுத்திட உள்ளதுடன், பழைய ஒப்பந்தங்களும் புதுபிக்கப்படவுள்ளன. “எட்கா“ ஒப்பந்தத்தை மாற்று பெயரில் உருவாக்குவது குறித்து இருவரும் கலந்துரையாட கூடுமென பொருளாதார நிபுணர்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

நிச்சயமாக “எட்கா“ உடன்படிக்கையை கைச்சாத்திட்டால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பன்மடங்கு விரிவடையும் என்பதுடன், இந்திய நிதியின் பயன்பாடும் இலங்கையில் அதிகரிக்கும். அதற்கு அடிகோடிடும் வகையில்தான் அண்மையில் ஜனாதிபதி, இந்திய நிதியை இலங்கையில் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் விரிவுப்படுத்தப்படுமென கூறியிருந்தார்.

இவ்வாறான பின்புலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விஜயம் அமைந்துள்ளதுடன், இந்திய ஜனாதிபதி திரளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் அஜித் டோவால் உட்பட முக்கிய அமைச்சர்களை அவர் சந்திக்கவுள்ளதுடன், பல்வேறு முதலீட்டாளர்களையும் சந்திக்கவுள்ளார்.

வடக்கு மற்றும் மலையக மக்களின் கோரிக்கைகளுடன் சென்ற டக்ளஸ், ஜீவன்

ஜனாதிபதியுடன் அமைச்சர்களான அலி சப்ரி, சுசில் பிரேமஜெந்த, ஜீவன் தொண்டமான் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் சாகல ரத்னாயக்க உட்பட உயர்மட்ட குழுவொன்று ஜனாதிபதியுடன் இந்தியா சென்றுள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்தியா அரசாங்கத்தில் மலையகத்தில் கட்டப்படும் வீட்டுத் திட்டங்களை விரைவுப்படுத்தும் கோரிக்கையும், அமுல்படுத்தப்படாதுள்ள 10ஆயிரம் வீடுகளை கட்டும் திட்டத்தையும் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கை முன்வைக்க உள்ளார்.

அத்துடன், மலையக பல்கலைக்கழகத்துக்கான இந்தியாவின் பங்களிப்பை அவர் கோர உள்ளதுடன், மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் மோடியிடம் கூறவுள்ளதாக இ.தொகாவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இதேவேளை, இருநாட்டு மீனவர்கள் விவகாரம் மற்றும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மோடியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் இரண்டு ஒப்பந்தங்களை கைச்சாத்திட நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

ஒட்டுமொத்தமாக ஜனாதிபதியின் இந்த விஜயம் இலங்கை இந்திய உறவுவில் பல புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்துமென இலங்கையின் பொருளாதார வல்லுனவர்கள் கருத்து வெளியிடுகின்றனர்