மறைந்த பிபிசி செய்தியாளர் ஜோர்ஜ் அழகைய்யா பலராலும் இதயபூர்வமாக நேசிக்கப்படுவது ஏன்?

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழரொருவர் இன்று பிரித்தானியாவிலும் பிபிசி தொலைக்காட்சியைப் பார்வையிடுகின்ற உலகில் பரந்துவாழும் மக்களாலும் மிகவும் அன்புடன் நினைவுகூரப்படுகின்றார் என்றால் அதற்கான பின்னணி என்ன என்று ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமாகும்.

0
181
Article Top Ad

கடந்த பலவருடகாலமாக குடல் புற்றுநோயுடன் போராடிவந்த பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பிபிசி செய்திச் சேவையின் மூத்த செய்தியாளரும் பிரபலமான செய்திவாசிப்பாளருமான ஜோர்ஜ் அழகைய்யா இன்று திங்கட்கிழமை காலமானார்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழரொருவர் இன்று பிரித்தானியாவிலும் பிபிசி தொலைக்காட்சியைப் பார்வையிடுகின்ற உலகில் பரந்துவாழும் மக்களாலும் மிகவும் அன்புடன் நினைவுகூரப்படுகின்றார் என்றால் அதற்கான பின்னணி என்ன என்று ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமாகும்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் பொறியிலாளரான தந்தை டொனால்ட் அழகைய்யாவிற்கும் தாயார் தெரேஸிற்கும் 1955ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி மகனாகப் பிறந்தார் ஜோர்ஜ் அழகைய்யா. அவருக்கு நான்கு சகோதரிகள். 1961ம் ஆண்டில் தமிழர்கள் இன ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் இலங்கையிலிருந்து மேற்கு ஆபிரிக்க நாடான கானாவிற்கு அழகையாவின் குடும்பம் குடிபெயர்ந்தது.

அங்கிருந்து பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்த நிலையில் ஜோர்ஜ் தனது பல்கலைக்கழகக் கல்வியை Durham பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்தார்.

பல்கலைக்கழகத்தில் தன்னுடன் கற்ற பிரான்ஸஸ் ரொபத்தன் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜோர்ஜ் அழகையாவிற்கு மத்தியு மற்றும் அடம் என்று இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுப் போதே மாணவர் பத்திரிகையான Palatinateன் ஆசிரியராக பணியாற்றிய ஜோர்ஜ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திலும் முக்கிய பதவிவகித்தார். 1980களில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பின்னர் சவுத் மகஸின் சஞ்சீகையில் ஆபிரிக்காவிற்கான ஆசிரியராகப் பணியாற்றிய ஜோர்ஜ் அழகைய்யா 1989ம் ஆண்டில் பிபிசியில் இணைந்துகொண்டார்.

 

பிபிசியில் செய்தி அறிவிப்பாளராக முன்னர் வளர்ந்துவரும் நாடுகளுக்கான நிருபராக லண்டனைத்தளமாகக் கொண்டு இயங்கினார். அதனைத் தொடர்ந்து தனது முதலாது வெளிநாட்டு நிருபர் பணிக்காக தென்னாபிரிக்காவிற்கு நியமிக்கப்பட்ட ஜோர்ஜ் அழகையா ஜொஹன்னஸ்பேர்க்கில் இருந்து பணியாற்றினார்.

ருவாண்டாவில் படுகொலைகள் கட்டவிழ்த்தப்பட்டபோது அது பற்றிய முதலில் அறியத்தந்த பிபிசி செய்தியாளர் அழகையா என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தவிர போர்களும் கலவரங்களும் நடந்த ஈராக் , சியராலியோன், ஆப்கானிஸ்தான், லைபீரியா மற்றும் சோமாலியாவில் இருந்தும் செய்திகளைத் தயாரித்தளித்தார்.

1999ம் ஆண்டில் துணை செய்தி அறிவிப்பாளராக பிபிசியில் பதவிப்பொறுப்பேற்ற அவர் குறுகிய காலத்திலேயே முக்கியமான பல செய்திப் பொறுப்புக்களை வகித்தார். 2014ம் ஆண்டில் குடல் புற்றுநோய் இனங்காணப்படும் வரை அவர் பல்வேறு முக்கியமான பங்களிப்புக்களை பிபிசிக்கு வழங்கியிருந்தார்.

ஆபிரிக்க மற்றும் வளர்முக நாடுகள் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றிருந்த ஜோர்ஜ் அழகைய்யா உலகின் கீர்த்தி மிக்க தலைவர்கள் பலரை நேர்காணல் செய்தவர் .

இதில் நெல்சன் மண்டேலா, டெஸ்மண்ட் டுட்டு, கொபி அனான் மற்றும் ரொபர்ட் முகாபே ஆகியோரும் அடங்கும். தனது செய்தியாக்கங்களுக்காக பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றவர் ஜோர்ஜ் அழகையா .

இதிலே BAFTA, Royal Television Society, Amnesty International UK Media Awards போன்றமுக்கிய விருதுகளும் அடங்கும்.2008ம்ஆண்டில் பிரித்தானிய அரசினால் வழங்கப்படும் Order of British Empire விருது அவருக்கு சூடப்பட்டது.

2004ம் ஆண்டு சுனாமி பேரனர்த்தத்தை தொடர்ந்து தனது தாயகமான இலங்கைக்கு திரும்பி தனது அப்பப்பாவினது பூர்வீக இல்லத்திற்கு சென்றிருந்தார். சுனாமியால் அந்த இல்லம் அழிவடைந்திருந்தபோதும் தான் சிறுவயதில் சகோதரிகளுடன் விளையாடிய கிணற்றை அடையாளம் கண்டிருந்தார் என நேர்காணலொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தனது சிறப்பான செய்தியாக்க மற்றும் அறிக்கையிடல் திறமைகளுக்காக ஊடகத்துறையினர் மத்தியில் பெருமதிப்பைக் கொண்டிருந்த ஜோர்ஜ் அழகைய்யா தனது சகாக்களுடன் அவர்கள் வயதில் மிக இளயோராக இருப்பினும் கனவான் தன்மையுடன் நடந்துகொண்டமைக்காகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய செய்தி அறிக்கையிடலின் போது அந்த மக்கள் நிலைநின்று பரிவுடன் செய்திகளை வழங்கியமைக்காகவும் ஊடகவியலாளர்களாலும் மக்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டார் என்பதை அவர் பற்றிய அஞ்சலிகளிலும் பதிவுகளிலும் இருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது.