சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது தமிழ் காங்கிரஸ்!

0
93
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமது கட்சி கடந்த சவர்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், அடுத்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளப் போவதில்லையென கூறினார்.

”13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது சம்பந்தமாக இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக எமக்கு மீண்டும் அழைப்பு வந்துள்ளது.

இதனை தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தையென சர்வதேச மட்டத்தில் காட்டிக்கொள்ளும் அரசாங்கம், தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு எந்தவித தொடர்பும் இல்லாத ஒற்றையாட்சிக்குள் இருக்கக் கூடிய 13ஆவது திருத்தம் தொடர்பாக பேச அழைத்துள்ளனர்.

இது மீண்டும் மீண்டும் ஈழத் தமிழர்களை முட்டாள்களாக்கும் வேலையாகும். ஈழத்தமிழர்களை ரணில் விக்ரமசிங்க மதிக்கத் தயாரில்லை அல்லது கணக்கெடுக்கத் தயாரில்லை என்பதையே இந்தச் செயல்பாடுகள் காட்டுகின்றன” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஜனாதிபதிக்கு அழுத்தம் திருத்தமான பதிலொன்றை அளிக்க தயாராகி வருவதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதுடன், மாகாண சபைத் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும் என்பதே தமிழ்க் கட்சிகள் சர்வக்கட்சி கூட்டத்தில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கான முழுமையான தீர்வாக இல்லாவிட்டாலும் அதனை அமுல்படுத்த ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சிகளை தமிழ் கட்சிகள் வரவேற்றுள்ளன.

ஆனால், பேச்சுவார்த்தை மட்டத்திலேயே இந்த நகர்வுகள் உள்ளதால் 15ஆம் திகதி நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டில் அழுத்தமான பதிலொன்றை வழங்க கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தயாராகி வருவதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைமறுதினம் விசேட உரையொன்றையயும் நிகழ்த்த உள்ளார்.