இலங்கை விடயத்தில் அடக்கி வாசிக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை

0
51
Article Top Ad

’இலங்கையில் நிலவும் மனித உரிமைகள்’ குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை பாதிக்கப்பட்டவர்களின் நலனை மையப்படுத்தி அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை, தாங்கள் கைவிடப்பட்டுள்ளோம் என போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கருதுகின்றனர்.

செப்டம்பர் 11ஆம் திகதியான நாளை தினம் (திங்கள்கிழமை) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவை பழைய விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,  அவை தமிழர்களின் கவலைகள் மற்றும் தேவைகளுக்கான தீர்வு எதையும் முன்வைக்கவில்லை எனவும் தமிழர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனைகளான விகாரைகளின் கட்டுமானம், வளமான நிலங்களை தொடர்ந்து கையகப்படுத்தும் நடவடிக்கைகள், தமிழர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து நசுக்கப்படுவது போன்ற அம்சங்கள் இந்த அறிக்கையில் மிகக்குறைந்த அளவிலேயே பேசப்பட்டுள்ளன எனக் கூறும் அவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் குறித்து அந்த அறிக்கையில் ஒரு வார்த்தை கூட இல்லை எனக் கூறுகின்றனர்.

தமிழர்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, ஐ நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த அறிக்கை “மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் அந்த மீறல்கள் மீண்டும் இடம்பெறாது என்ற உத்தரவாதத்திற்காக காத்திருக்கிறார்கள்” எனக் கூறினாலும், அவர்கள் தரப்பு கருத்தை பிரதிபலிக்காமல், அரசின் கூற்றை அங்கீகரிப்பது போலுள்ளது.

ஆட்சிமுறை சீர்திருத்தங்கள், இணைக்கப்பாடு மற்றும் முன்னெடுப்பிலுள்ள சவால்களின் மூலம் இருக்கும் வாய்ப்புகள் பற்றி பேசும் அவரது அறிக்கை, அவற்றுடன் அர்த்தமுள்ள மற்றும் சுயாதீனாமான பொறுப்புகூறல் செயல்பாடுகள் இருக்க வேண்டும் எனக் கூறினாலும், அப்படியான பொறுப்புக்கூறல் வழிமுறைகள் ஏதும் நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உண்மையை கண்டறியும் உள்ளக விசாரணை பொறிமுறைகளை தொடர்ச்சியாக நிராகரித்துள்ளனர். ஆனல், ஐ நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையோ அவர்களின் விருப்பதற்கு எதிராக அதை நோக்கி தமிழர்களை தள்ளுவது போலுள்ளது.

தமிழ் தாய்மார்களால் தலைமையேற்று நடத்தப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், சர்வதேச நீதியே தமக்கு வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமான ஓகஸ்ட் 30 அன்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் இதை மீண்டும் தெரிவித்துள்ளனர். “நங்கள் உள்ளூர் வழிமுறைகளில் நம்பிக்கை இழந்துவிட்டோம்,அதன் காரணமாகவே வடக்கு கிழக்கில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராடி வருகிறோம். சர்வதேச நீதியே எமக்கு வேண்டும்”.

இதேவேளை அந்த அறிக்கை நாட்டின் தெற்கில் நடைபெறும் ஒடுக்குமுறையை பற்றி பேசுகிறது, ஆனால் பல தசாப்தங்களாக வடக்கு கிழக்கில் அது நடைபெறுவது பற்றி மௌனம் காக்கிறது.

ஐ நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சிறுபான்மையினர் மீது மாத்திரமின்றி பொதுவாக அனைவர் மீதும் இந்த ஒடுக்குமுறை காணப்படுகிறது எனக் கூறுவது போலுள்ளது. “இந்த இராணுவத்தினரும் பொலிஸும் எம்மை சுற்றி தொடர்ந்து நிலைகொண்டிருப்பதும், நம்மை அச்சுறுத்தும் செயல்பாடானதும் எமக்கு மரண பயத்தையும் நம்முடன் இருக்கும் நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் கவலைகொள்ள வைத்துள்ளது. இந்த பயம் நம்மை தினந்தோறும் ஆட்டிப்படைக்கிறது” என வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களின் சங்கம் தனது அண்மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே பொறுப்புக்கூறல் தொடர்பாக நடைபெற்ற கூட்டம் தோல்வியடைந்தது என ஜனாதிபதியே தெரிவித்துள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதியை நல்லிணக்கத்தை முன்னெத்துச் செல்வதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார் என ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழு பாராட்டியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி இணைக்கப்பாட்டை முன்னெடுப்பது தொடர்பில் உண்மையை கண்டறியும் பொறிமுறையை ஏற்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது.

“அரச தகவல்களுக்கு அமைய ஜூலை மாதத்தில், அரச அமைப்புகள், சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பல தரப்புடன் கலந்துரையாடல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த கலந்துரையாடல் பரந்துபட்டளவில் இடம்பெறவில்லை என்பதையும் அந்த அறிக்கை ஏற்றுக்கொள்கிறது.

“எனினும், இந்த கலந்துரையாடல்கள் இதுவரை விரிவாக இருக்கவில்லை, மற்றும் பாதிக்கபப்ட்டவர்கள், அவர்களது சங்கங்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், மற்றும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலைமாறுகால நீதி பொறிமுறை நிபுணர்கள் இதில் உள்வாங்கப்படவில்லை”.

எனினும், இந்த முழு பொறிமுறையில் முக்கிய பங்குதாரரான பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரடியாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை மற்றும் இந்த பொறிமுறை திட்டமிடப்படும் போது அவர்களது கருத்துக்கள் ஒருபோதும் பரிசீலிக்கப்படவில்லை.

ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை இந்த கலந்துரையாடல் வழிமுறை தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தாலும், அது அப்படியான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும் என காத்திரமான பரிந்துரை ஏதும் அதில் இல்லை. சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சிறந்த நலன் தொடர்பில் உத்தேச, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் உதட்டளவில் வலியுறுத்தியுள்ளது.

அது மாத்திரமின்றி, உண்மையை கண்டறியும் வழிமுறையானது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களால் நம்பும்படி இருக்க வேண்டுமென கூறும் அந்த அறிக்கை, அது நேர்மையான கலந்துரையாடல்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறுகிறது. மேலும் அதை நடைமுறைபடுத்த அரசியல் திடசங்கற்பம் வேண்டும் என அந்த அறிக்கை கூறுகிறது.

“பாதிக்கபப்ட்டவர்கள் பழிவாங்கப்படும் அச்சமின்றி, தமது  செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு சுதந்திமாக இருப்பது மாத்திரமின்றி, அவர்கள் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்பதை செயற்படுத்தும் சூழ்நிலையிலும் இது நடைபெற வேண்டும்.”

கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நடைமுறையில் இருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பழிவாங்கப்படுவார்கள் என அஞ்சுகிறார்கள் மற்றும் மக்கள் தங்கள் உரிமைகளைக் கோரியும் ஈர்க்கும் போராட்டங்களை நடத்தியதற்காகவும், அற்பமான குற்றச்சாட்டுகளின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுகிறார்கள்.

அதுமாத்திரமின்றி இன்னும் இராணுவம் மற்றும் பொலிஸ் பிடியிலிருக்கும் நிலங்களில் எந்தளவிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பிலான விபரங்களில், கடந்த அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தாலும், அது குறித்து அரசிடம் அந்த அறிக்கை கேள்வி ஏதும் எழுப்பவில்லை.

ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கடந்த புதன்கிழமை (6) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இலங்கையில் இன்னும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நம்பிக்கையின்மை உள்ளதாக கூறியுள்ளார்.

“இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ந்து நம்பிக்கையின்மை நிலவுகிறது-அது போர்க் குற்ற அராஜகங்களாக இருக்கலாம், அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல், அல்லது அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றில் நம்பிக்கையின்மை நிலவுகிறது, நாடு முன்னேற வேண்டுமாயின் அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்”.

எனினும், ஐ நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில், அதன் ஆணையாளர் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடல் செய்து நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தாலும், தனது அதிருப்தியை வெளிப்படுத்தவோ அல்லது அது நடைபெறவில்லை என்றால், தண்டனை நடவடிக்கைகள் எடுப்பது பற்றி எந்த உத்தேச கருத்தையும் முன்வைக்கவில்லை.