‘ஷி யான் 6’ இன் ஆய்வுத் திட்டத்தில் இருந்து ருஹுணு பல்கலைக்கழகம் விலகுகிறது

0
45
Article Top Ad

சீனாவின் புவி இயற்பியல் அறிவியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 உடன் நடைபெறவிருந்த ஆய்வுத் திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சீனக் கப்பலின் வருகைக்கு அண்டை நாடான இந்தியா இலங்கை மீது கவலையுற்று இருந்தது.

ஷி யான் 6 ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி இலங்கையில் நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும், இதற்கு நேற்று மாலை வரை இலங்கை அதிகாரிகளால் இராஜதந்திர மட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

சீன புவி இயற்பியல் அறிவியல் ஆய்வுக் கப்பல் ஷி யான் 6 இன்று மாலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 474 கடல் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, ஷி யான் 6 ரக கப்பல் இலங்கையின் எந்தவொரு துறைமுகத்திலும் நிறுத்துவதற்கு இராஜதந்திர மட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

ஷி யான் 6 ஒரு ஆய்வுக் கப்பல் என்பதால், அது தனது ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் திகதிகளை மற்றும் பகுதிகளை நாட்டின் வெளியுறவு அமைச்சுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் சீன புவி இயற்பியல் விஞ்ஞான ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இலங்கையை வந்தடையும் என தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) முன்னதாக தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், ஷி யான் 6 உடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இணங்கிய பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் ஒருவர் வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்ததாகவும், மற்றைய விரிவுரையாளர் நாட்டின் பல்கலைக்கழக அமைப்பிலிருந்து முற்றாக விலகியதாகவும் ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.