நிர்மலா சீதாராமன் இலங்கை வருகிறார்

0
76
Article Top Ad

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார்.

அவரது இந்த விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

அதேபோன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யும் இந்திய நிதி அமைச்சர் அங்கு  State Bank of India வின் கிளையொன்றையும் திறந்துவைக்கவுள்ளார்.

அன்றைய தினம் மாலை கொழும்பில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மலையகம் 200’ நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார்.

இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளையும் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பார் எனவும் அறிய முடிகிறது.

ராஜ்நாத் சிங்கின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதன் பின்புலம்
இந்திய நிதி அமைச்சர் தமது இலங்கை விஜயத்தில் திருகோணமலையில் இந்தியா முன்னெடுத்துவரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆய்வுகளை நடத்த உள்ளதுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ள முதலீட்டுத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

இம்மாதம் 2ஆம் திகதி இந்திய பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவிருந்த நிலையில், திடீரென அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது. குறித்த பயணம் ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட இந்தியா மறுத்துவிட்டது.

என்றாலும், சீன கப்பல் விவகாரத்தில் இலங்கை காத்துவந்த மௌனமே ராஜ்நாத் சிங்கின் பயணம் ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்
‘IORA’ (Indian Ocean Rim Association) என கூறப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த 11ஆம் திகதி இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் முக்கிய கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தார்.

எஸ்.ஜெய்சங்கர் தமது இலங்கை விஜயத்தில் திருகோணமலைக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார். என்றாலும், இறுதி தருணத்தில் அவரது நிழ்ச்சி நிரல் மாற்றப்பட்டது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துகளை வெளிட்டதால் கடும் பாதுகாப்புடன் எஸ்.ஜெய்சங்கர் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறான பின்புலத்திலேயே இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த விஜயம் தீர்மானமிக்கதாக அமையும் என இந்திய பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.