இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சீனா தொடர்ந்து தனது அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது.
இதற்கிடையே இந்தியா மற்றும் அமெரிக்கா எழுப்பிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் சீன ஆய்வுக் கப்பலான ‘ஷியான் 6’ கடந்த 23ஆம் திகதி கொழும்புவை வந்தடைந்தது. தனது இரண்டு நாள் ஆராய்ச்சியை இலங்கை கடற்கரையில் இன்று தொடங்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதியிலும், இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) மற்றும் ருஹூனா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கொழும்பில் உள்ள வெளி விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2020 டிசம்பரில் சீனாவின் கடல் சார் ஆராய்ச்சிக் கப்பல்களில் ஷியான் 6 என்ற ஆராய்ச்சிக் கப்பல் சேர்க்கப்பட்டது. புவி மற்றும் இயற்பியல் ஆய்வில் கவனம் செலுத்தும் நாட்டின் முதல் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலாகக் கருதப்படும் இது சுமார் 80 நாட்களுக்கு கடலில் இயங்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
13 ஆராய்ச்சிக் குழுக்கள் 28 ஆராய்ச்சி திட்டங்களுடன் 12 ஆயிரம் கடல் மைல்கள் முழுவதும் பயணம் செய்து தனது ஆய்வு பணிகளை சீன கப்பல் செய்ய திட்டமிட்டுள்ளது.
சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்தன. இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் பெய்ஜிங்கில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையிலும் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டது.
கடந்த செப்டம்பரில், இந்தியாவின் முதல் உள் நாட்டில் கட்டப்பட்ட போர்க் கப்பலான ‘ஐ.என்.எஸ். டெல்லி’ இலங்கைக்கு நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டது.
கடந்த வாரம், கொரிய கடற்படையின் ரோக்ஸ், குவாங் கேட்டோ தி கிரேட்’ மற்றும் சமீபத்தில், ஜப்பான் கடல் சார் நவீன போர்க்கப்பல் இலங்கையின் வடகிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
சீனக் கப்பல்களின் வருகை குறித்து இந்தியா பலமுறை கவலை தெரிவித்து வரும் நிலையில், வெளிநாட்டுக் கப்பல்களின் வருகைக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறை பின்பற்றப்படும் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் தொடர் ஆதிக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இலங்கையின் கடல் வளங்களை ஆராய சீனா ஆராய்ச்சி கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு அளித்து வரும் நட்புறவில் விரிசலை ஏற்படுத்துமா? என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது.