புலனாய்வு ஊடகவியலாளர் பஸீரின் உடல் மற்றும் உயிருக்கு சேதம் கடும் நடவடிக்கை ; பொரளை பொலிசார் எச்சரிக்கை

0
45
Article Top Ad

இலங்கையின் முன்னணி புலனாய்வு ஊடகவியலாளரான எம்.எப்.எப்.எம். பஸீரின் உயிருக்கு ஆபத்தோ அல்லது அவருக்கு உடலியல் ரீதியாக சேதங்களோ ஏற்பட்டால், அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்ப‌டும் என பொரளை பொலிசார் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

ஊடகவியலாளர் பஸீரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொரளை பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஊடகவியலாளர் பஸீருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்த விசாரணைகள் இன்றும் பொரளை பொலிஸ் நிலையத்தில் நடாத்தப்பட்டது.

இதன்போது, அச்சுறுத்தல் விடுத்த நபர் மற்றும் தொலைபேசி இலக்கத்தை வழங்கியதாக கூறப்படும் நபர் ஆகியோர் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் விடயத்தை விசாரணை செய்த பொரளை பொலிஸ் பரிசோதகர், ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலின் பின்னணியில் அவர் முன்னெடுக்கும் அறிக்கையிடல் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் இருப்பது தொடர்பில் சான்றுகள் விசாரணையில் வெளிப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிட்ட நடவடிக்கை ஒன்று இதன் பின்னணியில் இருப்பதற்கான வாய்ப்பு தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், நாரம்மல பொலிஸ் நிலையம் ஊடாக ஊடகவியலாளரை அச்சுறுத்த எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பிலும் தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்டுள்ளன.

இந்த அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டுள்ள நாரம்மல மற்றும் கட்டுபொத்த பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் இருவர் தொடர்பிலும் தகவல்களை சேகரித்துள்ள பொலிஸார், ஊடகவியலாளர் பஸீரின் உயிருக்கோ அல்லது உடலுக்கோ ஏதேனும் சேதம் ஏற்படுத்தப்பட்டால் கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என எச்சரித்து, ஊடகவியலாளரின் இணக்கத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்த நாரம்மல பொலிஸ் நிலைய அதிகாரிகள் எவரேனும் , மூன்றாம் தரப்பொன்றினால் பயன்படுத்தப்பட்டனரா மற்றும் அவ்வாறு மூன்றாம் தரப்பொன்று சில பொலிசாரின் உதவியுடன் தொடர்ச்சியாக மக்களை அச்சுறுத்தி தமக்கு சாதகமான விடயங்களை செய்துகொண்டுள்ளதா? என்ற விடயம் தொடர்பில் குளியாபிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு அறிவித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவ்விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்ப‌டுகின்ற‌து.

ஏற்கனவே ஊடகவியலாளர் பஸீர், நாரம்மல பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்த்து தென்னகோனுக்கும் இம்மாத ஆரம்பத்தில் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.