வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்பின் வாழ்க்கையை மாற்றிய தமிழர்..ஒரே இரவில் கிரிக்கெட் வீரரான காவலாளி

0
49
Article Top Ad

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது ஒரு பெயர் பிரபலமாகிவிட்டது என்றால் அது ஷமார் ஜோசப்பின் பெயர்தான். ஏனென்றால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த கோட்டையான காபா கிரிக்கெட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி துவம்சம் செய்துள்ளது.

இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு டெஸ்ட் போட்டியை வென்றிருக்கிறது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷமார் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த நிலையில் ஷமார் ஜோசப் ஏற்கனவே செக்யூரிட்டி பணியில் இருந்தார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால் ஷமார் ஜோசப் எவ்வாறு கிரிக்கெட் வீரராக மாறினார் என்பது குறித்து தற்போது ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. அதில் ஷமார் ஜோசப் இன்று கிரிக்கெட் வீரராக திகழ்ந்ததற்கு காரணமே ஒரு தமிழர் தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. கரீபியன் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் ஷமார் ஜோசப் சாதாரண வலை பயிற்சி பவுலராக பணியாற்றி இருந்திருக்கிறார்.

அப்போது ஷமார் ஜோசப் வீசிய பந்து ஒன்றை பார்த்த தமிழக கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா அசந்து போயிருக்கிறார். உடனே ஷமார் ஜோசப்பை அழைத்துஇ நீ யார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஷமார் ஜோசப் தாம் ஒரு வணிக வளாகத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறேன் என்றும் தினமும் இங்கு வந்து ஒரு மணி நேரம் பந்து வீசினால் கூடுதலாக பணம் கிடைக்கும் என்பதால் தான் வந்தேன் என்றும் கூறியிருக்கிறார்.

உடனே சரி நான் சொல்வது போல் ஒரு ஐந்து பந்து வீசி காட்டு என்று பிரசன்னா கூறியிருக்கிறார். உடனே ஷமார் ஜோசப் வீசிய 5 பந்துகளும் பாகிஸ்தான் வீரர் அஸம் கானை கதிகலங்க வைத்திருக்கிறது. இதனை பார்த்ததும் உடனே கயானா அமேசான் வாரியர்ஸ் அணி கேப்டன் இம்ரான் தாஹிரை அழைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்கு தெரியாது. நாளைக்கு பிளேயிங் லெவனில் இந்த பையன் விளையாட வேண்டும் என்று பிரசன்னா கூறி இருக்கிறார்.

உடனே பிரசன்னாவை மேலும் கீழுமாக பார்த்த இம்ரான் தாகிர் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு என் மீது நம்பிக்கை இருந்தால் இந்த பையன் நாளைக்கு பிளேயிங் லெவனில் விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஷமார் ஜோசப் தமக்கு பணிக்கு செல்ல நேரமாகிவிட்டது என கூறி இருக்கிறார். உடனே பிரசன்னா நீ கொஞ்சம் நேரம் காத்திரு என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் இம்ரான் தாகிர், பிரசன்னா ஆகியோர் அணியின் உரிமையாளரை தொடர்பு கொண்டு ஜோசப்க்கு கயானா அணிக்கு விளையாடுவதற்கான ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தை வாங்கியவுடன் ஷமர் ஜோசப்பின் கண்களில் கண்ணீர் கொட்டி இருக்கிறது. தமிழர் பிரசன்னாவின் தலையீட்டில் தான் இன்று ஷமார் ஜோசப் என்ற ஒரு உலக தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கிறார்.