அமெரிக்க பால விபத்தில் மாயமானவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை : காவல்துறை

0
16
Article Top Ad

“விபத்துக்குள்ளான நேரம் மற்றும் தண்ணீரின் வெப்பநிலை கருத்தில் கொள்ளும் போது, மாயமான 6 பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.” மேரிலாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரும்புப் பாலத்தில் சரக்குக் கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் மாயமான 6 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று மேரிலாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோா் நகரில் படாஸ்ப்ஸ்கோ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ‘ஃபிரான்சிஸ் ஸ்காட்’ பாலம் அந்த நகர துறைமுகத்தின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாகும்.

இரும்புக் கம்பிகளால் உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் 1977-ஆம் ஆண்டு முதல் போக்குவரத்துக்குப் பயன்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டாலி’ என்ற சரக்குக் கப்பல் அந்தப் பாலத்தை கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு 1.28 மணிக்கு இலங்கை நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10.58 மணி கடந்துச் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தூணில் மோதியது. இதில் அந்தப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

அப்போது அந்தப் பாலம் வழியாகச் சென்றுகொண்டிருந்த 7 வாகனங்கள் ஆற்றுக்குள் மூழ்கியதாகவும், அந்த வாகனங்களில் இருந்த 8 பேரில் இருவர் மட்டுமே உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 6 பேரை அமெரிக்க கடற்படையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், கப்பல் விபத்துக்குள்ளான நேரம் மற்றும் தண்ணீரின் வெப்பநிலையை கணக்கில் கொண்டால், அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மறுஅறிவிப்பு வரும்வரை அவ்வழியே கப்பல் போக்குவரத்துக்கு தடை விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் விபத்து தவிர்ப்பு

பாலத்தை மோதுவதற்கு முன்னதாகவே கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததால், பாலத்தை கப்பல் மோத வாய்ப்பிருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.