CTID தமிழ் இளைஞர்களைப் பின்தொடர்வதால் உறவினர்கள் அச்சம்

0
33
Article Top Ad

வடக்கில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் இளைஞர்கள் அரச பாதுகாப்புப் படையினரால் பின்தொடரப்படுவதால் அவர்களது பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் (CTID) தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா, ஓமந்த பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர், ஆறு வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருக்கும் தமது மகனை குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு (CID) வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையால் அச்சமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசிக்கும் வவுனியா ஓமந்த பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் ரதீபன் (வயது 32) என்பவரை குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி சிங்கள மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை பொலிஸார் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த இளைஞனின் பெற்றோர், அதில் எழுதப்பட்டிருந்த விடயம் தமக்கு புரியவில்லை எனவும், அதனால் கடிதத்தை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம் பொலிஸார் தமது வீட்டிற்கு வந்து மகனைப் பற்றி விசாரித்ததாக தெரிவித்த பெற்றோர்கள், 2018 ஆம் ஆண்டு முதல் தமது பிள்ளை வெளிநாட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக வெளிநாட்டில் இருக்கும் தமது பிள்ளையை குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கின்றமையால், அவரது  பாதுகாப்பு குறித்தது அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் பிரதேச ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பதினாறு வருடங்களாக வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு இராணுவத்தினர் சென்றதாகவும், இதனால் அவரது உறவினர்களும் அச்சமடைந்துள்ளதாகவும் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த உயிர் மாறன் எனப்படும் சகாயநாதன் சந்தியாப்பு 2004ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டு 2008ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசித்து வருவதாக மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில்  சந்தியாப்புவிள் உறவினர் வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினர் இவரைப் பற்றிய தகவல்களை திரட்டியதால் அவரது உறவினர்களும் அச்சமடைந்துள்ளதாகவும்,  சந்தியாப்பு இலங்கை அரசாங்கத்தின் கீழ் புனர்வாழ்வு பெறாதவர் எனவும் பிரதேச ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நீதி நடைமுறைகள் இல்லாத சிறை தண்டனை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இராணுவ ஆட்சியின் கீழ் அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டம் நடத்தப்பட்ட முகாம்களில் பாலியல் வன்முறை உள்ளிட்ட சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான நம்பகமான ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

CTID அழைப்புகள் தொடர்கின்றன

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினருமான அரவிந்தன் எனப்படும் செல்வநாயகம் ஆனந்தவர்ணனை, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் (CTID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவரது பேஸ்புக் கணக்கு குறித்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக மார்ச் 12ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு மார்ச் 9ஆம் திகதி அவருக்கு அறிவிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக் கணக்கு குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைத் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் (CTID) மார்ச் 12ஆம் திகதி முன்னிலையாகுமாறு கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தைச் சேர்ந்த அரவிந்தன் என அறியப்படும் ஆனந்தவர்ணனுக்கு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா பிரிவிற்குப் பொறுப்பான, பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.ஏ.யூ.எஸ்.கே. ஹேவாவசம்மின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் கையளிக்ககப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மார்ச் 12ஆம் திகதி கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள பூட்டாணி கெப்பிடல் கட்டிடத்தில், விசாரணைப் பிரிவு 1இன், நிலையப்பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் தனக்கு இருந்த வேலைப்பலு காரணமாக விசாரணைக்கு முன்னிலையாக முடியாமை குறித்து பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அறிவித்ததோடு, தான் இதுவரை விசாரணைக்காக செல்லவில்லை என்பதை அரவிந்தன் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அலுவலராக கடமையாற்றும் ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு விசாரணைக்கு என அழைத்திருந்தது.

மார்ச் 15ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முல்லைத்தீவு பொலிஸ் தலைமையத்தினால் கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றின் ஊடாக, அரச ஊழியரும், சுயாதீன ஊடகவியலாளருமான திருச்செல்வம் திவாகருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த கடிதத்தில் மார்ச் 15ஆம் திகதி கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள பூட்டாணி கெப்பிடல் கட்டிடத்தில் பரிசோதனையை முன்னெடுக்கும் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கான காரணம் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எவ்வாறெனினும் காரணத்தை அறிவதற்காக திவாகர், முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் மாவட்ட பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரையும் சந்தித்து கேட்டபோதும் அவர்களும் காரணம் தெரியாது என பதிலளித்துள்ளனர்.

பின்னர் கடந்த 15ஆம் திகதி திருச்செல்வம் திவாகர் விசாரணைக்காக முன்னிலையாானதோடு, இதுத் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் தகவல் அளித்ததாக உறுதிப்படுத்தினார்.