தொழிலதிபரும் டெஸ்லா தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் நாளை இந்தியா வரவிருந்த நிலையில் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா பணிகள் காரணமாக பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ளதாகவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஏன் திடீரென்று ஒத்திவைத்தார் என்பதற்கான காரணங்கள் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள், இந்திய அரசாங்கத்துடன் இறக்குமதி வரி குறித்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராதது போன்ற காரணங்கள் இதற்குப் பின்னணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் நேற்று முதல் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் வேளையில் எலான் மஸ்க் வருகையும், டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங் சேவை அறிவிப்புகள் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்குச் சாதகமாக அமையும் என கணிக்கப்பட்டு இருந்த வேளையில், மஸ்க் திடீரென இந்திய பயணத்தை பின் வாங்கியுள்ளார்.
இதனால் சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விதமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.