இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், 2022ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி அரகலய போராட்டக் காலத்தில் அழிக்கப்பட்ட பேருந்துகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து நட்டஈடு கிடைக்கவில்லை என இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அரகலய போராட்டத்தின் போது 50 பேருந்துகள் முழுமையாகவும், 50 பேருந்துகள் பகுதியளவிலும் சேதமாக்கப்பட்டது.
பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்ற ரீதியில் அரசாங்கத்திடம் பல தடவைகள் இதற்கான நட்டஈட்டை வழங்குமாறு கோரியுள்ளோம்.
பல பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளை காப்புறுதி நிறுவனங்களின் உதவியுடன் பழுது பார்த்தனர். ஆனால் 30 இற்கும் அதிகமான பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளை பழுதுபார்க்க முடியாது காத்திருக்கிறார்கள்.
பேருந்துகள் எரிக்கப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் திணைக்களம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. பேருந்துகளை அழித்தவர்களின் அடையாளத்தை பொலிஸார் வெளிப்படுத்தினால், அவர்கள் மீது சிவில் வழக்குப் பதிவு செய்து இழப்பீடு பெறலாம்.
சந்தேக நபர்களை அடையாளம் காண விசாரணைகளை நடத்தும் திறன் தற்போதைய பொலிஸ் டிஐஜிக்கு உள்ளது. பேருந்துகளை கவிழ்த்த சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.” என்றும் கெமுனு விஜேரத்ன கூறினார்.