ஜனாதிபதி தேர்தல்: ரணில் – சஜித்தின் வெற்றியை தீர்மானிக்கப் போவது யார்?

0
95
Article Top Ad

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்கணிப்புகளில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் 12 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ளது.

சிங்கள மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கும் அதே வேளையில், தெற்கில் பெரும்பாலான மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தில் உள்ளது. அது யதார்த்தமானால், தெற்கில் இம்முறை ரணிலின் நிலை மூன்றாம் நிலையாகும்.

ஆனால், இரண்டாவதாக வரும் சஜித்தும், மூன்றாவதாக வரும் ரணிலும் சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் இறுதியில் வெற்றியாளராக மாற வாய்ப்பு உள்ளது.

சஜித் , தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளைப் பெற்றால், அவர் அனுரவை வீழ்த்தி முதல் சுற்றிலே வெற்றியாளராக முடியும்.

மேலும், பெரும்பான்மையான தமிழ், முஸ்லிம் வாக்குகள் சஜித்துக்கு செல்லாமல் ரணிலுக்கு விழும் பட்சத்தில், ரணில் முதல் சுற்றில் சஜித்தை வீழ்த்தி பந்தயத்தில் இரண்டாவதாக வரவும் வாய்ப்பு உள்ளது.

தேசிய மக்கள் சக்தியால் முதல் சுற்றில் வெற்றிபெற முடியாத சந்தர்ப்பத்தில் ரணில் இரண்டாவது இடத்தை பெற்றால் இரண்டாம் விருப்ப வாக்கின் மூலம் ரணில் வெற்றியீட்டக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது

அதன்படி இம்முறை தமிழ் அல்லது முஸ்லிம் வாக்குகள் தீர்க்கமான காரணியாக உள்ளது. இல்லை என்றால் 75 வீதமாக இருக்கும் சிங்களவர்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நபர் வெற்றியாளராக வாய்ப்புண்டு.

2019ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுவகையில் இம்முறை சஜித்துக்கு மலையக தமிழ் வாக்குகளும், முஸ்லிம் வாக்குகளும் முழுமையாக கிடைக்காது. வடக்கில் தமிழ் வேட்பாளர் உள்ளிட்ட காரணிகளால் அவர்களது தீர்மானம் எவ்வாறு இருக்குமென அனுமானிக்க முடியாது.

இவ்வாறானதொரு பின்னணியில் ரணில் முதல் சுற்றில் இரண்டாவதாக இருந்து , இரண்டாவது விருப்புரிமையை பெற்று வெற்றியாளராக மாறுவது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ரணில் பல தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டியுள்ளது.

அதன் முதல் விக்கெட் , ஐக்கிய மக்கள் சக்தியைவிட அதிக வாக்குகளை பெற முயற்சிப்பது. கடந்த பொதுத் தேர்தலில் தென்னிலங்கையிலிருந்து , 27 இலட்சம் வாக்குகளை சஜித் பெற்றார்.

பொதுஜன பெரமுனவின் வாக்காளர்களின் முழு ஆதரவையும் ரணில் பெற்றால், ஐக்கிய மக்கள் சக்தியின் மேற்கூறிய எண்ணிக்கையை ரணிலுக்கு எளிதாகத் தாண்ட முடியும்.

ஆனால் யதார்த்தம் அதுவல்ல. நாமல் ராஜபக்சவின் வருகையால் பொதுஜன பெரமுனவின் வாக்காளர்கள் ரணிலை ஆதரிப்பார்கள் எனக் கருத முடியாது.

ரணிலை அவர்கள் ஆதரிக்கும் செயல்பாட்டை செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளுர் மட்டத்தில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைவர்களின் கையில்தான் உள்ளது. ஆனால், மேல்மட்டத் தலைவர்கள் ரணிலுடன் கைகோர்த்துள்ள போதிலும் கீழ்மட்டத் தலைவர்கள் இன்னமும் மௌனமாகவே உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிக்கொள்ள ரணில் தேட வேண்டிய அடுத்த வாக்குக் குவியல் , ஐ.தே.க வாக்காளர்களிடம்தான் உள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காமல் 10 இலட்சத்துக்கும் அதிகமான ஐ.தே.க வாக்காளர்கள் ஒதுங்கியிருந்தனர். இவர்கள் விரக்தியாக இருந்தவர்கள்.இவர்களை ரணில் கவர வேண்டியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ரணில் சிறப்பாக நிர்வகித்தமையால் ரணிலுக்கு பல தரப்புகளும் ஆதரவு வழங்கி வருவதால் இந்த வாக்காளர்களை ரணிலால் கவர முடியும். இந்த தொகை ரணிலின் சவாலுக்கு முன்னால் உள்ள மதிப்புக்குரிய வாக்குகளாகும்.

வடக்கு-கிழக்கு தமிழர்களின் வாக்குத் தளத்தை வைத்துப் பார்க்கும்போது, கடந்த தேர்தலை போல் சுமந்திரனால் தமிழ் வாக்குகளை சஜித்துக்கு பெற்றுக் கொடுக்க முடியாது. தனித் தமிழ் வேட்பாளர் வருகையும் ரணிலுக்கு சாதகமாக அமையலாம்.

முஸ்லிம் வாக்குகள் கிழக்கு மற்றும் வன்னியில் உள்ளன. எனவே வன்னியில் முஸ்லிம் வாக்குகளுக்குச் சொந்தக்காரரான ரிஷாத் பதியுர்தீனின் ஆதரவு ரணிலுக்கு மிகவும் முக்கியமானது.

ரிஷாத்தை வெல்லும் போரில் ரணில் ஏற்கனவே முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். அதற்குக் காரணம் கடந்த 8ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக்குள் ரிஷாதின் பிரவேசம் நடைபெறவில்லை. இப்போது 14ஆம் திகதி தனது முடிவு அறிவிக்கப்படும் என ரிஷாத் கூறுகிறார்.

அதிகாரம் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை, ஆயிரக்கணக்கான பிணைப்புகள் மற்றும் எதிர்கால அமைச்சு பதவிகள் பற்றிய பேரம் பேசலில் ரிஷாதின் பயணம் தீர்மானிக்கப்படும். அதை சிறப்பாக செய்யும் , ரணில் அல்லது சஜித்தில் எவரோ ஒருவர் ரிஷாதின் ஒப்புதலை பெறுவார்கள்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் வாக்களித்த விதத்தில் இருந்து இம்முறை வடகிழக்கில் முஸ்லிம்களின் வாக்களிக்கும் போக்கு வித்தியாசமாக இருக்கும்.

2019ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்தின் முன் ஒரு ஆபத்து இருந்தது, இம்முறை அவ்வாறானதொரு சவாலின்றி தமது வாக்குகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருந்தாலும் , கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் வாக்குகள் தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுவதில்லை.

முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான அரசியலில் ஈடுபடும் அதாவுல்லா, அஹமட் நசீர் போன்றோரின் பாத்திரங்களும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களான மயோன் முஸ்தபா, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் பாத்திரங்களும் இங்கு மிக முக்கியமானவை.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ரணிலுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிகிறது. அதன்படி, முதல் சுற்றில் சஜித்தை ரணில் முறியடிக்க வேண்டுமானால், ரணிலுக்கு வடக்கு – கிழக்கு தமிழ், முஸ்லிம் வாக்குகளே தீர்க்கமான வாக்குகள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.