சோழர் காலம் முதல் பாதுகாக்கப்பட்ட திருகோணேஸ்வர ஆலயத்தின் தாலி திருட்டு: அச்சத்தில் பொது மக்கள்

0
141
Article Top Ad

சோழர் காலம் தொடக்கம் பல நூறு வருட காலமாக திருகோணேஸ்வர ஆலயத்தில் பாதுகாப்பாக பேணப்பட்டு வந்த தாலி போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ மக்களால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் இத்தாலி பகலில் திருட்டு போய் உள்ளது.

இதற்கு எதிராக பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கினர். கோயில் நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர். பல நூறு கோடி பெறுமதியான ரத்தினங்கள், வைரங்கள் பொதிக்கப்பட்ட 5 சவரன் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்தனர்.

ஒரு பெண் கழுத்தில் தாலி இறங்குவது என்பது கணவன் இறந்து அவருடைய உடல் செயலிழந்ததன் பின்னரே. அதே போல் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போயுள்ளமை சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா? இல்லையெனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தாலி விற்பனை செய்வதற்காகவா? என பொது மக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது.

இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலீஸ் முறைப்பாடு கூட செய்யவில்லை. இது கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தின் வழமை ஆகியுள்ளது. அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவுன் வைரம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் திருட்டு போய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து மாவட்ட செயலாளர், அரசங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ள்ளது. பொலிஸாருக்கு பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளன.

மேலும் இவ்விடயம் குறித்து பொதுமக்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து அவரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.ஆளுநர் இத்தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்விடயத்தில் ஆளுநரால் மட்டுமே அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இத்தாலி மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இவ்விடயத்தை பொதுமக்கள் ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வந்ததாக கூறுகின்றனர்.

தாலி திருட்டு போயவுள்ள சம்பவம் குறித்து ஆன்மீக வாதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது திருகோணமலை மக்களுக்கு ஒரு தோஷம் என்றும் இனிவரும் காலங்களில் திருக்கோணமலை மக்களுக்கு இருண்ட காலக்கட்டமாக மாறி உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.