சஜித்தால் வெல்ல முடியாது: அனுர அவரை மிஞ்சிவிட்டார் – ரணில்

0
10
Article Top Ad

“ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவால் வெற்றி பெற முடியாது. சஜித் இப்போதே தோற்றுப் போயுள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் காலத்தில் அவரை மிஞ்சிய வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க இருக்கின்றார்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மஹியங்கனை பொது விளையாட்டரங்கில் நேற்று (04) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க,

நாட்டில் புதிய பொருளாதாரத்தைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. மக்கள் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். பொருட்களின் விலைகளை இன்னும் குறைக்க வேண்டும். இதனைச் செய்யவே தேர்தலை நடத்துகின்றோம்.

இந்தத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். நாம் எந்த வழியில் செல்லப் போகின்றோம் என்பதைத் தீர்மானிக்கலாம்.

இந்த நாட்டில் நாம் ஆரம்பித்த பயணம் எதிர்காலத்திலும் தொடர வேண்டும். மக்களுக்குக் கஷ்டம் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஒரே அடியில் சரிந்த பொருளாதாரத்தை மீட்க முடியாது. சர்வதேசத்தின் உதவி எமக்கு இருக்கின்றது.

இன்றைய நிலையில் சஜித் பிரேமதாஸவால் அநுரகுமார திஸாநாயக்கவைத் தோற்கடிக்க முடியாது. இலங்கையில் ஒவ்வொரு முறையில் ஜனாதிபதித் தேர்தல்களின் போது இரு வேட்பாளர்களுக்கு மட்டுமே முக்கிய இடமிருக்கும்.

நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும், மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் மற்றுமொரு எதிர்க்கட்சிக்கு நாங்கள் இடமளிக்கவில்லை.

அந்தவகையில் சஜித் பிரேமதாஸ இப்போதே தோற்றுப் போயுள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் காலத்தில் அவரை மிஞ்சிய வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க இருக்கின்றார்.

நல்லாட்சி அரசு இருந்த காலத்தில் கூட அனுரகுமார அந்த அரசுடன் இணைந்தே செயற்பட்டார். ஆனால், இன்று அநுர சஜித்தை மிஞ்சி வந்துள்ளார். சஜித் செய்யும் சில முட்டாள்தனமான செயற்பாடுகள் அநுரவுக்குச் சாதமாக அமைந்துள்ளன.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சியை முன்னோக்கி கொண்டு வந்த தலைவர்களின் பணியை இன்று நானே ஆற்றுகின்றேன் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது. உங்கள் விவசாயமும் பாதுகாக்கப்படாது.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here