அதானி குழுமத்தின் மீதான அமெரிக்காவின் குற்றப் பத்திரிகைத் தாக்கல்: ரசியாவின் இந்திய ஆதரவுப் பின்னணி பற்றிய கேள்விகள்

0
23
Article Top Ad

அமெரிக்காவில் மோசடி செய்ததாக உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான கௌதம் அதானி மீது நியூயோர்க் சமஸ்டி நீதிமன்றத்தில் (Federal Court) கடந்த புதன்கிழமை அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கௌதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க வழக்கறிஞர்கள் அந்த பிடியாணையை வெளிநாட்டு சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதானி மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன?

அதானி குழுமத்திற்குச் சொந்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக

இந்திய அரச அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டொலர்களுக்கு மேல் இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவில் பணம் திரட்டுவதற்காக அதனை மறைத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளில் 02 பில்லியன் டொலருக்கும் அதிகமான இலாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படும் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அதானியும் அவரது நிர்வாகிகளும் இந்திய அதிகாரிகளுக்குப் பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதானியின் உறவினரான சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட அறுவர் மீதும் அமெரிக்கா முறைப்பாடு அளித்துள்ளது.

இதே முறைப்பாட்டில் அமெரிக்கா பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி மீது வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இலஞ்சம் கொடுக்கப்பட்ட இடங்களையும் பெறுபவர்களையும் கண்காணிக்க கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தியமை மற்றும் வழங்கப்பட்ட தொகைகளை சுருக்கமாகக்

காட்டும் ஒரு ஆவணத்தை புகைப்படம் எடுத்தமை உட்பட அவர்கள் தங்கள் இலஞ்ச முயற்சிகள் குறித்து விரிவான மின்னணு ஆவணங்களை தயாரித்துள்ளனர்.

பெயர்களைக் குறிக்க குறியீட்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாகர் அதானியின் தொலைபேசியில் உள்ள விபரங்கள்

அதானியின் உறவினரான சாகர் அதானியின் தொலைபேசியில் அரச அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டமை குறித்த விபரங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டு கௌதம் அதானி, வினீத் எஸ் ஜெயின் உள்ளிட்ட பலர் டில்லியில் சந்தித்து இலஞ்சம் பற்றி விவாதித்துள்ளனர்.

அப்போது தனது தொலைபேசியில் நிறுவனம் வாயிலாக செலுத்த வேண்டிய தொகையைக் காட்டும் ஆவணத்தை புகைப்படம் எடுத்துள்ளனர்.

ஒப்பந்தங்கள் தொடர்பாக குப்தா மற்றும் சாகர் அதானி இடையே 2020 ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதியிடப்பட்ட மின்னணு செய்திகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபேஷ் அகர்வால், பவர்பொயிண்ட் மற்றும் எக்செல் உதவியுடன் இலஞ்சம் பற்றிய அனைத்து விவரங்களையும் விரிவாக தயார் செய்துள்ளதாகவும் இலஞ்சம் எப்படி கொடுக்கப்பட்டது என்பதும் அதில் எழுதப்பட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு, புலனாய்வு முகவர்கள் அமெரிக்காவில் சாகர் அதானியை சந்தித்து அவரிடமிருந்த மின்னணு சாதனங்களை கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளிகாகியுள்ளன.

மேலும் அதில் முக்கிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றாச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் கூறுவது என்ன?

அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுப்பு வெளியிட்டுள்ளது.

அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

“அமெரிக்க நீதித்துறை கூறுவதைப் போல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை, குற்றம் சுமத்தப்பட்டவர் நிரபராதி. இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தைப் பின்பற்றுவதில் எப்போதும் உறுதியாக உள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்கள் பங்குகளை வைத்திருப்பவர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அதானி குழுமம் அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்கியிருக்கும் என உறுதியளித்துள்ளது.

குற்றப்பத்திரிக்கை தாக்கலால் பேரிடியை சந்தித்த அதானி குழுமம்

இந்தியாவின் பணக்காரர்களின் வரிசையில் முக்கியப் புள்ளியாக திகழும் 62 வயதான கௌதம் அதானிக்கு இந்த குற்றச்சாட்டு பெரும் பின்டைவாகும்.

இதன் தாக்கம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் என அவரது வணிகத்தில் பெரிதும் தாக்கம் செலுத்தலாம் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் அதானி குழும பங்குகள் 10 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தன. தனது சந்தை மூலதனத்தில் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை அதானி குழுமம் இழந்துள்ளது.

துறைமுகம், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என நீண்டிருக்கும் அதானி குழுமத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை காலையிலும் 10 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.

மேலும் பிடியாணையைத் தொடர்ந்து கென்யாவில் அதானி நிறுவனம் முன்னெடுக்க இருந்த விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மின்சார திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான செயன்முறையை இரத்து செய்யுமாறு கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டார்.

கென்யாவின் நைரோபி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1.85 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

ஆப்பிரிக்காவின் பரபரப்பான விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக அதனை 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கவும் திட்டமிடப்பட்டது.

ஆனால், விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் ஒப்பந்தத்திற்கு கென்ய உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் மேலும் பல நாடுகள் அதானியின் முதலீட்டு திட்டங்களை இரத்து செய்யகூடும் என்பதில் சந்தேகமில்லை.

ஒருவடத்திற்கு முன்பே எழுந்த குற்றச்சாட்டு

2023 ஆம் ஆண்டு அதானி குழுமம் மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில் அதானி குழுமம், அமெரிக்க நிறுவனங்கள் உட்படப் பல தரப்பிடமிருந்து கடனாகவும் பத்திரங்கள் மூலமாகவும் மூன்று பில்லியன் டொலர் நிதி திரட்டியதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அதற்காக, தவறாக வழிநடத்தக்கூடிய அறிக்கைகளைப் பயன்படுத்தியதாகவும், இதன்கீழ் திரட்டப்பட்ட பணம் இலஞ்ச எதிர்ப்பு கொள்கையை மீறுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

அப்போதிலிருந்து அதானி நிறுவனம் அமெரிக்காவின் கண்காணிப்பின்கீழ் இருந்து வருகிறது. மேலும் இந்த இலஞ்ச விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

அந்த மோசடி கூற்றுகளை கௌதம் அதானி மறுத்த போதிலும் அதானி குழுமத்தின் பங்குகள் பாரியளவில் சரிந்தன.

இந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக, அதானி குழுமம் அதன் நற்பெயரை மீட்டெடுக்க முயற்சித்து வந்த நிலையில் தற்போது தாக்கல்

செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை பேரிடியாக மாறியுள்ளது.

இந்தியாவிற்குள் அரசியல் மோதல்?

இந்தியாவின் பொருளாதாரம், நாட்டின் முன்னணி உள்கட்டமைப்பு கௌதம் அதானியுடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் இந்தியாவிற்குள் அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான இந்திய தேசிய காங்கிரஸ், அதானியின் நிறுவனங்கள் மீது நாடாளுமன்ற நிதிக்குழுவின் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

முக்கியமான உள்கட்டமைப்பில் கௌதம் அதானியின் முதலீடுகள் இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு சக்தியாக மாறியிருந்தாலும்,

அவருடைய அரசியல் தொடர்புகளும் அவரை வேறுபடுத்திக் காட்டியுள்ளன. அதானியின் பொருளாதார திட்டங்கள் முக்கியமானவை. ஆனால் அவருடைய அரசியல் தொடர்புகள் சர்ச்சைக்குரியது.

குறிப்பாக அதானிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனிப்பட்ட உறவு உள்ளது, இந்த உறவு அதானியின் நிறுவனத்திற்கு இலாபகரமான ஒப்பந்தங்களைப் பெற உதவியது.

சில சந்தர்ப்பங்களில், நிறுவனம் விமான நிலையங்களின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு ஏற்ப ஏல விதிகளை மோடி அரசாங்கம் மாற்றியமைத்துமுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான கௌதம் அதானி தனது அரசியல் தொடர்புகளின் மூலம் பயனடைவதாக நீண்டகாலமாக அவர்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தும் என்கிறார் பரஞ்சோய் குஹா தாகுர்தா, வணிகக் குழுவைப் பற்றி விரிவாக எழுதிய இந்தியப் பத்திரிகையாளர்.

அமெரிக்காவில் அதானி குழுமத்தின் முதலீடு இரத்து செய்யப்படுமா?

அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்ட் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதானி குழுமத்தின் மீது பாரிய நிதி மோசடிகுற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த வாரம் ட்ரம்பின் வெற்றிக்குத் வாழ்த்து தெரிவித்த கௌதம் அதானி, அமெரிக்காவில் 10 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாகவும் உறுதியளித்திருந்தார்.

இந்தியா-அமெரிக்கா உறவு மிகவும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை பாரிய தாக்கத்தை செலுத்துமா இல்லையா என்று உறுதியாக கூறமுடியாது.

இலங்கையில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு கிட்டுமா?

மறுபுறம் இலங்கையிலும் வடமாகாணம் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமை தற்போது வரை பேசு பொருளாகும்.

மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் இந்த திட்டத்தை எவ்வித தடையுமின்றி அதானி குழுமத்தால் செயற்படுத்த முடியும் என்று கூறமுடியாது.

ஏனெனில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் இந்தியாவின் அதானி குழுமத்துடனான கற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள மாற்றுத் தன்மையுடைய ஆட்சி மாற்றமும், அதானி குழுமத்திற்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

ஆனாலும் இந்தியாவைப் பகைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கம் இயங்க முடியாது. ஆனாலும் அதானி குழுமம் இலங்கையில் எதிர்பார்க்கும் அனைத்து முதலீடுகளுக்கும் இலங்கை இடமளிக்கக்கூடிய சந்தர்பங்கள் இல்லை.

அதானி குழுமத்தின் முதலீடுகள் மற்றும் அதானி குழுமத்தின் நிதிப் பலங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு மோடி அரசாங்கம், அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள பனிப்போரைச் சற்றுத் தணிக்கலாம் என்று எண்ணக்கூடும்.

இருந்தாலும் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சி முதலாவது ஆட்சியைப் போன்று அமையுமா அல்லது புவிசார் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப அமெரிக்கத் தீர்மானம் எடுப்போர்

மற்றும் அமெரிக்க கொள்கை வகுப்போரின் திட்டங்களுக்கு ஏற்ப அமையுமா என்பதை தற்போது அனுமானிக்க முடியாது.

இப் பின்னணியில்தான் இலங்கையின் அணுகுமுறையும் அமையும். குறிப்பாக இந்தியாவை மையப்படுத்திய பின்னணியோடுதான் இலங்கையின் அநுரகுமார திஸாநாயக்காவின் அரசாங்கம் செயற்படும் ஏது நிலை உண்டு.

அதானி குழுமத்திற்கு ஆதரவாக ரசியா குரல்

கடுமையான சவாலை எதிர்கொண்டிருக்கும் அதானி குழுமத்திற்கு ஆதரவாக ரசியா குரல் கொடுத்துள்ளது.

அதானிக்கு எதிராக எழுப்பப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என ரசியாவின் அரச ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

“அதானி நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒரு தலைபட்சமானது போன்றும் சர்வதேச அளவில் அதானி நிறுவனத்திற்கு செல்வாக்கு அதிகரித்து வருவதற்கு எதிரான நடவடிக்கை போன்றும் தெரிகிறது.

குறிப்பாக அதானி நிறுவனத்திற்கு எதிரான அண்மைய குற்றச்சாட்டுகள் அந்த நிறுவனத்திற்கும் எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி நிறுவனங்களுக்கு இடையேயான கடன் திட்டத்தை சீர்குலைக்கும் அமெரிக்காவின் திட்டங்களில் ஒன்றாக தெரிகிறது.

அமெரிக்காவின் முடிவுகளை ஏற்காமல் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை வழிக்கு கொண்டு வருவதற்காக,

அந்நாட்டு அரசு அதிகாரிகள் செய்துள்ள திட்டமிட்ட சதி போன்றும் தெரிகிறது.

அதானி நிறுவனம் சர்வதேச அளவில் தனது முதலீட்டை விரிவுபடுத்துவது மேற்கு நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என அந்த செய்தியில் பதிவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here