ஓய்வூதியங்கள் இரத்து: அரசியல் மாற்றத்துக்கான முதல் படி என அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

0
231
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியங்களை இரத்து செய்யும் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நேற்று நெடுந்தீவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர், “நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முந்தைய அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்களை நீக்குவது அவசியமாகும். இதன்மூலம், நிதி சுமையை குறைத்துவிட முடியும்,” எனத் தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் தவிர, நாட்டின் பிற பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகள் அனைத்தும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். இந்த வளங்களை மக்கள் நலனுக்காக மாற்றுவதே நோக்கம் என  அவர் குறிப்பிட்டார்.

ஊழலை முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான குறிக்கோள் என குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலங்களில் ஊழலில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்கள் தற்போது சட்டத்தின் பிடிக்குள் உள்ளனர் என்றும், இந்த வழக்குகளில் அரசாங்கம் நேரடியாக தலையிடவில்லை என்றும், சட்டம் தன்னிச்சையாக செயற்படுகிறது என்றும் மேலும் தெரிவித்தார்.

வறுமை மற்றும் சமூக அபிவிருத்திக்கு தீர்வாக, “சமூக சக்தி” எனும் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலமாக அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.