இலங்கைப் பொருட்களுக்கான வரி குறைப்பு – சாதகமான மாற்றமா?

0
247
Article Top Ad

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கைப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  44 வீத வரியை விதித்தமை இலங்கையை ஆட்டம் கொள்ள வைத்திருந்த நிலையில், தற்போது அதனை 20% ஆகக் குறைத்துள்ளார். இந்தப் புதிய வரி ஓகஸ்ட் 7 முதல் அமுலுக்கு வரும். முந்தைய உயர் வரி விகிதங்களுடன் பாரிய சவால்களை எதிர்கொண்ட இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு இது ஓரளவு திருப்திகொள்ள வைக்கக்கூடிய செய்தியாகவே உள்ளது.

காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றம்

2025 ஏப்ரலில் அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு நாடுகளுக்கு பாரியளவில் வரி விகிதங்களை ட்ரம்ப் அறிவித்தார். அதில், இலங்கை இறக்குமதிகள் மீது 44% வரியை ட்ரம்ப் அறிவித்தார். ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, மக்களின் வாழ்க்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, இது பேரிடியாகவே அமைந்தது.

இந்நிலையில், இலங்கை அதிகாரிகளுக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜூலை மாதம் இது 30% ஆகக் குறைக்கப்பட்டது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற நிலையில், தற்போது அதற்கு கணிசமான பெறுபேறு கிடைத்துள்ளது.

பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்ற சிறிய பொருளாதார நாடாகிய இலங்கையின் நிலையை விளக்குவதற்காக, இலங்கை வர்த்தக நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பலர், அமெரிக்க அதிகாரிகளுடன் நேரிலும், இணைய வழியிலும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புகள், இலங்கை ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கவும், இந்த பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் சமநிலையாக போட்டியிடும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டன.

எதிர்த்தரப்பிலும் பாராட்டு

இந்த வரி குறைப்பு தொடர்பாக பொதுவிலும் திரைக்குப் பின்னாலும்  பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார வரம்புகளைப் புரிந்துகொண்டதற்காக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“இதில் நான் மனதார மகிழ்ச்சியடைகிறேன், இதற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி, மேலும் ஒரு சிறிய நாடாக நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டதற்காக அமெரிக்காவிற்கும் நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வர்த்தக  வாய்ப்புகளை அதிகரிக்கப்பதற்கும், உலக நாடுகளுடன்  வலுவான தொடர்புகளை உருவாக்குவதிலும் இலங்கை தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிய-பசுபிக் பங்குச் சந்தைகளின் எதிரொலி

ஜனாதிபதி ட்ரம்ப் புதிய வரிகளை அறிவித்ததால், ஆசிய-பசுபிக் பங்குச் சந்தைகள் சிறிது வீழ்ச்சி கண்டன. தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பங்குகள் லேசாக சரிந்தன. காரணம், முதலீட்டாளர்கள் அமெரிக்க பொருளாதார தகவல்களுக்காக காத்திருந்தனர். புதிய வரிகள் சில அச்சத்தை ஏற்படுத்தினாலும், அண்மைய வர்த்தக ஒப்பந்தங்கள் அந்த அச்சத்தை குறைத்ததால் சந்தை எதிர்வினை மிதமாக இருந்தது என பங்கு சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இலங்கை கணிசமான வரிக் குறைப்பினை பெற்றுக்கொண்ட போதும், உலக சந்தையில் தனது நிலையை வலுப்படுத்த தொடர்ந்து போராட வேண்டும். இந்த நேர்மறையான மாற்றங்களைத் தொடர்ந்து கொண்டுசெல்ல, இலங்கை அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை வேண்டும். உறுதியான முயற்சிகள் மற்றும் சிறந்த இராஜதந்திர நடவடிக்கை மூலம், இலங்கை தனது வர்த்தக உறவுகளை மேம்படுத்தி அதன் பொருளாதாரத்தை முன்கொண்டு செல்வது அவசியமாகும்.

செய்தியாக்கம் – கே.கே.