Article Top Ad
செம்மணி விவகாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் எனவும் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செம்மணிப் புதைகுழி தொடர்பில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைத் தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதியான தீர்வு வேண்டும். குழந்தைகள் முதல் எத்தனை அப்பாவிகளைக் கொடூரமாகக் கொலைசெய்து மண்ணுக்குள் புதைத்த கொடிய செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையில் இரக்கமின்றி தமிழ் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு செம்மணிப் புதைகுழி முக்கிய ஆதாரமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போர் முடிந்தாலும் உறவுகளின் இழப்புகளினால் மிகுந்த கவலையோடு வாழும் உறவினர்களுக்கு செம்மணி விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்மணிப் புதைகுழி ஆராய்ச்சி தொடர்பாக ஈடுபடுகின்ற அனைவருக்கும் இவ்வேளையில் நன்றி கூறுவதோடு நீதியான விசாரணை தொடர்ந்து இடம்பெற வேண்டும். இலங்கையில் உள்ள மனிதாபிமான அமைப்புகள் யாவும் இவ்விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயத்தில் நேரடியாகப் பங்குகொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம் செம்மணி விவகாரம் தொடர்பாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். புதைகுழிகளில் விளையாட்டுப் பொம்மையும் பால் பருக்கும் போத்தலும் பச்சிளம் பாலகர்களின் எலும்புக் கூடுகளோடு உலகுக்குச் சொல்லும் செய்தியைச் சகலரும் உணர வேண்டும்.
காலம் கடந்தாலும் இயற்கை, இறைவன் , புதைகுழிகள் ஊடாக உண்மையை வெளிப்படுத்தியுள்ளமை “தர்மம் தோற்காது” என்ற நம்பிக்கையைத் தருகிறது. கட்சி பேதமின்றி தமிழர்கள் ஒன்றுபட்டு இவ்விவகாரத்துக்கு நீதி கிடைக்க முயற்சி செய்ய வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

