உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையின் நிலையை உயர்த்த தேசிய ஆலோசனைக் கூட்டம்

0
192
Article Top Ad

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய புத்தாக்க முகமை (National Innovation Agency – NIA) முன்னெடுப்பில், உலகளாவிய புத்தாக்க குறியீட்டுக்கான (Global Innovation Index) தரவு தேவைகள் குறித்து தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் கொழும்பில் நேற்று (14) நடைபெற்றது.

உலகளாவிய புத்தாக்க குறியீட்டில், 7 முக்கிய பிரிவுகளின் கீழ் 80 குறிகாட்டிகள் மூலம் நாடுகளின் புத்தாக்க செயற்திறனை மதிப்பிடுகின்றனர். இந்த தரவரிசையில் இலங்கையின் இடத்தை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதனடிப்படையில், நாட்டின் சர்வதேச போட்டித்திறனை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் அறிவு, தொழில்நுட்பம், தொழில் முனைவோருக்கான பிராந்திய மையமாக இலங்கையை உருவாக்குதல் போன்ற இலக்குகள் வலியுறுத்தப்பட்டன.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பண்பாட்டை வளர்த்தல், அரசு–தனியார் கூட்டாண்மைகளை வலுப்படுத்தல், தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப வலுவான புத்தாக்க சூழலை உருவாக்கல் மற்றும் புத்தாக்க அறிவுசார் பொருளாதாரத்திற்கு மாற்றுதல் ஆகியவற்றில், அரசாங்கம் உறுதியுடன் செயற்படும் என தெரிவிக்கப்பட்டது.

அமைச்சுக்கள், தேசிய நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி தனியார் துறை பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தரவு இடைவெளிகளை சரிசெய்தல் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தல் குறித்து கலந்துரையாடினர்.

ஆரம்ப அமர்வுக்குப் பிறகு, இலங்கையின் புத்தாக்க திறன் உலகளவில் துல்லியமாக பிரதிபலிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தரவு சேகரிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான நிலையான தேசிய நடைமுறையை உருவாக்கும் செயற்பாட்டு அமர்வும் நடைபெற்றது.