பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான வர்த்தமானி செப்டெம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) பாராளுமன்றில் தெரிவித்தார்.
இச்சட்டத்தை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் அறிக்கை அடுத்த மாத ஆரம்பத்தில் கிடைக்கும் என்றும், அதன் பின்னர் வர்த்தமானி வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணை குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தும் வரை அல்லாமல், எமது கொள்கை பிரகடனத்தில் கூறியதைப் போன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும், அது தொடர்பில் ஆராய அரசாங்கம் ஆட்சியமைத்து குறுகிய காலப்பகுதியில் தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் கூடியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் அடிப்படையில், திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இந்த மாதத்திற்கு இறுதி செய்யப்பட்டு, செப்டெம்பர் ஆரம்ப பகுதிக்குள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதே சந்தர்ப்பத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக நாட்டின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

