இலங்கை அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்தம் : கொள்கையில் நிலைத்திருக்குமா அரசாங்கம்?

0
360
Article Top Ad

இலங்கை அஞ்சல் ஊழியர்கள் 19 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நாடு முழுவதும் சுமார் 17,000 அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பணி நிலைமைகள் மற்றும் ஊதியங்களை பாதிக்கும் நீண்டகால பிரச்சினைகளுக்கு அவசர கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுப்பதோடு, கைவிரல் அடையாள வருகை நடைமுறையை ஏற்க முடியாதென்றும் கூறியுள்ளனர்.

எனினும், அரசாங்கம் தனது நிலைப்பாட்டிலிலிருந்து பின்வாங்காதென நேற்று அமைச்சர் நளிந்த பாராளுமன்றில் கூறிருந்த நிலையில், கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்திற்கு முன்னாள் இன்று காலை முதல் அஞ்சல் பணியாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முக்கிய கோரிக்கைகள் :

  • வரலாற்று கணக்கீட்டு முறைகளின் அடிப்படையில் கூடுதல் நேரக் கொடுப்பனவுகளை சரியானதும் தாமதமில்லாததுமான முறையில் வழங்குதல்.
  • தற்காலிக, மாற்று மற்றும் கடைநிலை தொழிலாளர் நிலை பதவிகளை வகிப்போருக்கு நிரந்தர பணியாளர் அந்தஸ்து வழங்குதல்
  • அஞ்சல் சேவையில் நீண்டகாலமாக நிலவும் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புதல்.
  • அஞ்சல் போக்குவரத்துப் பிரிவில் செயற்பாட்டு சிக்கல்களைத் தீர்த்தல்
  • முன்னணியில் செயற்படும் அலுவலர்களுக்கு வருடாந்தம் மூன்று சம்பள உயர்வுகளை நடைமுறைப்படுத்துதல்
  • நிர்வாகத் தரத்திலுள்ள சில ஊழியர்களுக்கு கட்டாய கைரேகை பயன்பாட்டை நீக்குதல்.

இந்தப் பிரச்சினைகள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும், சமீபத்திய பட்ஜெட் அதிகரிப்புகள் உயரும் வாழ்க்கைச் செலவு கட்டணத்தை சமநிலைப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லையெனவும் தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதிகாரப்பூர்வமாக உயர்வு ஏற்பட்டுள்ளது என்ற கூற்றுகள் இருந்தபோதிலும், கணக்கீட்டு முறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களால் கூடுதல் நேரக் கொடுப்பனவுகள் நடைமுறையில் குறைக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

அரசாங்கம் இந்த வேலைநிறுத்தத்தை “நியாயமற்றது” என்று கருதுகிறது. பல கோரிக்கைகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார கூறுகிறார். அதே நேரத்தில் கூடுதல் நேரக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதையும், கைரேகை வருகை முறையை நீக்குவதையும் அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படையாக நிராகரித்துள்ளார். இது சட்டப்பூர்வமாக கட்டாயமானது மற்றும் சுமூகமான செயற்பாடுகளுக்கு அவசியமானது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

அரசாங்க விதிமுறைகளை ஏற்காத தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என்று அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இது தற்போதைய வேலைநிறுத்தத்திற்கு எதிரான அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்கம் அஞ்சல் ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளையும் நிறுத்தி வைத்துள்ளது மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைக்காது என்று எச்சரித்துள்ளது.

தபால் மா அதிபர் கூறுவது என்ன?

தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாது என்று தபால் மா அதிபர் ருவான் சத்குமார அறிவித்தார். வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன, அவர்கள் தங்கள் மாத சம்பளத்தைப் பெற விரும்பினால் உடனடியாக பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்புடைய தொழிற்சங்கங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து வரும் வேலைநிறுத்தத்தால் சுமார் ரூ. 140 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சத்குமார மேலும் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் இருந்தபோதிலும், கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் தேங்கி நிற்கும் தபால்கள் இப்போது விநியோகிக்கப்படுகின்றன. சம்பளக் கொடுப்பனவுகளுக்கு திறைசேரி நிதியின் அவசியத்தை அவர் விளக்கியுள்ளதோடு, பணிக்கு வருபவர்களுக்கு மட்டுமே சம்பளம் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

வேலைநிறுத்த ஏற்பாட்டாளர்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக குறிப்பிட்டுள்ள சத்குமார, பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தொழிற்சங்கங்களை வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தினார்.

போராட்டத்தின் எதிர்வினை

இந்த வேலைநிறுத்தம், இலங்கை முழுவதும் அஞ்சல் சேவைகளில் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்வதேச அஞ்சல் பொருட்கள் உட்பட 1.5 மில்லியனுக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பொதிகள் விநியோகிக்கப்படாமல் குவிந்துள்ளன. இது பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அரசாங்கத்திற்கு நிதி இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கைவிரல் அடையாள பதிவு இன்று பல முக்கிய துறைகளில் பின்பற்றப்படும் நிலையில், இதனை எதிர்ப்பதற்கான காரணம் என்ன என்பது பலரது கேள்வியாக உள்ளது. எனினும், தமது ஏனைய கோரிக்கைகளை மலினப்படுத்தவே, கைவிரல் அடையாளத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாக தபால் தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.

வேலைநிறுத்தங்களின் போது சில நெகிழ்வுத்தன்மைகள் பின்பற்றப்படுகின்ற போதும், தற்போதைய நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளது. இது தீவிரத்தை அதிகரிக்குமா அல்லது மாற்று வழிக்கு வழிவகுக்குமா என்பது கேள்வியாக காணப்பட்டது.

வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட தேக்கமடைந்த கடிதங்கள் மற்றும் பொதிகளை நிர்வகிக்க பாதுகாப்புப் படையினரிடமிருந்து வாகனங்களை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதரவை தபால் மா அதிபர் கோரியுள்ளார். எனினும், இதற்கு விசேடமாக பயிற்சிபெற்றவர்களே அவசியம் என்றும், பாதுகாப்புத் தரப்பினரால் இதனை செய்ய முடியாதென்றும் அஞ்சல் தொழிற்சங்கம் கூறுகின்றது.

இந்நிலையில், அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகள் எவ்வாறு அமையப்போகின்றது என்பது பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஏனைய அரச துறையினருக்கு பாடமாக அமையுமா அல்லது காலம் காலமாக தொடரும் நிலைகள் நீடிக்கப் போகின்றனவா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தியாக்கம் – கே.கே.