ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் இன்று (8) ஆரம்பமாகின்றது. இந்த முறை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
வெளியுறவு அமைச்சின் தகவலின்படி, ஜெனீவா பயணத்தின் போது அமைச்சர் விஜித ஹேரத் பல்வேறு நாடுகளின் உயர் மட்ட இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க்கை அவர் தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ளார்.
இலங்கை குறித்து ஏற்கனவே வெளியான அறிக்கைக்கு இலங்கை பதில் வழங்கியுள்ளதோடு, வெளியக தலையீடு அவசியமில்லை என்றே கூறுகின்றது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயத்தையடுத்து குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பாக, வெளிப்புற தலையீடுகள் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதோடு, மக்களைப் பிரித்து நிறுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில், இந்த அமர்வு இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும்.

