எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்குகளில் உத்தரவிடப்பட்ட இழப்பீட்டை குறித்த நிறுவனம் செலுத்த முடியாதென தெரிவித்துள்ள நிலையில், குறித்த நிறுவனத்திற்கு எதிராக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சமர்ப்பணங்களை, எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு உத்தரவிட்டது.
குறித்த அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பாக முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் செயற்படுத்தப்படும் விதம் குறித்து ஆராய்வதற்காக அந்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலங்கையின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய பேரழிவுக்கு, கப்பல் இயக்குபவர்கள் இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பினை குறித்த நிறுவனம் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பு கரிசனை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

