த.வெ.க. கூட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – கைதாவாரா விஜய்?

0
62
Article Top Ad

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேற்று கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதில் 10 குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 21 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேவேளை கட்சியின் தலைவர் விஜய் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னதாக த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என சென்னை மேல் நீதிமன்றம் கூறியிருந்தது.

எனினும் குறுகிய இடத்தை வழங்கியமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக கூறி தமிழக வெற்றிக் கழகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றமை, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்காமை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் பின்னர் அவர் அறிக்கையொன்றைவெளியிட்டு அனுதாபம் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கவுள்ளதாகவும்,  காயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பின்னர் அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்கு படையெடுத்தமை, இரங்கல் தெரிவித்தமை என்பன உடனுக்குடன் இடம்பெறுவதால், இது திட்டமிட்ட செயல் என்றும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

எவ்வாறாயினும், இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடும் இடத்திற்கான உரிய பாதுகாப்பு வழங்காமை யாருடைய தவறு என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அரசியல் கட்சி கூட்டமொன்றில் இவ்வளவு பேர் உயிரிழந்துள்ளமை இருப்பது இதுவே முதற்தடவையாகும்.