இஸ்ரேலிய இராணுவம் கட்டியுள்ள ஒரு சுவர், நீலக் கோட்டை மீறி செல்கிறது என்று ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. லெபனானில் கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை நடத்திய ஆய்வில், இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் உறுதிப்படுத்தியுள்ளார்.
லெபனானை இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் இருந்து பிரிக்கும் ஐ.நா. வரையறுத்த கோடுதான் நீலக் கோடு.
இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அமைத்துள்ள கொங்கிரீட் ‘T-சுவர்’ சுமார் 4,000 சதுர மீட்டர் லெபனான் நிலப்பரப்பை உள்ளூர் மக்களுக்கு அணுக முடியாதவாறு ஆக்கியுள்ளது. மேலும், யருனுக்கு தென்கிழக்கே நீலக் கோட்டை மீறி செல்லும் இன்னொரு சுவர் பகுதியும் கட்டப்பட்டு வருவதாக அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் கூறியுள்ளார்.
இந்த கண்டுபிடிப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவத்துக்கு தகவல் அளித்து, அந்தச் சுவரை அகற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை கோரியுள்ளது.
லெபனான் நிலப்பரப்பில் இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்தவொரு கட்டுமானமும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 1701-ஐ மீறுவதாகவும், லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், அது 2022-இல் தொடங்கிய இஸ்ரேலிய பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார்.

