நாடு புயலால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து மீள்கட்டியெழுப்பும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட Rebuilding Sri Lanka திட்டத்துக்கு உள்நாட்டைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களும், பல்வேறு நிறுவனங்களும் இதுவரை 1,893 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்தோடு, டிட்வா புயலால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனங்கள் உடனடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புயல் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செயன்முறையை வடிவமைக்கும் நோக்கில், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைமையில் அனைத்து காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்ற கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னர், அனர்த்தத்தால் சேதமடைந்த வர்த்தகங்கள், சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கான உடனடி இழப்பீட்டு பொறிமுறை ஒன்றை அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் ஏற்கனவே செயற்படுத்தி வருவதாக செயலாளர் தெரிவித்தார்.
திட்டத்தின் கீழ், சிறிய அளவிலான சொத்து சேதங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான சேதங்களுக்கு, தேவையான தகவல்கள் மற்றும் மதிப்பீடுகள் பெறப்பட்ட பின் முழுமையான இழப்பீடு வழங்கப்படும்; அதுவரை ஒரு பகுதி இழப்பீடு முன்னதாகவே வழங்கப்படும் என காப்புறுதி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

