முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

0
191
Article Top Ad

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (28) பிற்பகல் அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார். 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டார்.

மதூஷிடம் இருந்து மீட்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கத் தவறியமையினாலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பின்னர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்ட அவரை, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, டக்ளஸ் தேவானந்தாவிற்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பிலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மேலும் 19 துப்பாக்கிகள் குறித்தும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.