காதலர் தினத்தில் பூ விற்பனையில் வீழ்ச்சி

0
42
Article Top Ad

இலங்கையின் தலைநகர் கொழும்பில்  பூ விற்பனையாளர்கள், இந்த ஆண்டு காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதிக விலை மற்றும் மக்களின் குறைந்த கொள்வனவு சக்தியே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு சாதாரண நாட்களில் சுற்றப்பட்ட சிவப்பு ரோஜா ரூ. 350 இற்கு விற்கப்படும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு அதன் விலை ரூ. 700 முதல் ரூ.1000 ரூபாவரை  அதிகரித்துள்ளதாக கூறும் விற்பனையாளர்கள், ஒரு பூச்செண்டு ரூ.2500 முதல் ரூ.3000 வரை விற்பனை செய்யப்படுகிறதாகவும் தெரிவித்துள்ளனர்.

விலைகள் அதிகரித்துள்ளமையின் காரணமாகவே தமது விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாரிய இணைய நிறுவனங்கள் உயர் மட்ட வாடிக்கையாளர்களைக் குறிவைத்து 50,000 ரூபா முதல் 75,000 ரூபாவுக்கும் அதிகமான விலையுள்ள பாரிய ரோஜா பூச்செண்டுகளை விற்பனை செய்கின்றன.

இதனால் சாதாரண கடைகளிலும் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், நுவரெலியா மற்றும் பதுளை பகுதிகளில் அறுவடை குறைவாக உள்ளதால், இந்தியாவிலிருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அதிக இறக்குமதி வரி மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாகவும் பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக கூறும் வர்த்தகர்கள், இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைத்துள்ளதால், பூக்களை வாங்குவதை விட விலைகளை மட்டும் கேட்டுவிட்டுச் செல்வதையே அதிகம் காண முடிவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.