சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் சோண்டர்ஸ்

0
15
Article Top Ad

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மின்னொளியில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மாவனெல்லை செரெண்டிப் கழகத்தை 4 – 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட சோண்டர்ஸ் கழகம், இறுதிப் போட்டியில் சென். மேரிஸ் கழகத்தை எதிர்த்தாடவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி எதிர்வரும் 04 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெறவுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் செரெண்டிப் அணித் தலைவரும் கோல்காப்பாளருமான மொஹமத் லுத்பியின் தவறுகளும் பின்கள வீரர்களின் கவனக் குறைவும் அவ்வணியன் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

முதல் 19 நிமிடங்களுக்குள் 4 நிமிட இடைவெளியில் சோண்டர்ஸ் 2 கோல்களைப் போட்டு செரெண்டிப் கழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ஸியார்ட் முபாஸலின் கோர்ணர் உதையின்போது லுத்பி பந்தை சரியாக தட்டிவிடத் தவறியதால் ரொஜர் பிலிப்பே முதலாவது கோலை சோண்டர்ஸ் கழகத்துக்கு போட்டுக்கொடுத்தார்.

4 நிமிடங்கள் கழித்து அப்துல் அஸிஸ் சுமார் 25 யார் தூரத்திலிருந்து மின்னல் வேகத்தில் சோண்டர்ஸ் கழகத்தின் இரண்டாவது கோலைப் போட்டார்.

போட்டியின் 28ஆவது நிமிடத்தில் செரெண்டிப் கழகத்துக்கு கிடைக்கப்பெற்ற பெனல்டியை மொஹமத் ரஹுமான் கோலாக்கினார்.

எவ்வாறாயினும் அடுத்த 7ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் அணித் தலைவர் இந்தீவர உதாரவின் ப்றீ கிக் மூலம் மொஹமத் பௌஸான் 3ஆவது கோலை புகுத்தினார்.

மேலும் 3 நிமிடங்கள் கழத்து செரெண்டிப் கழக கோல்காப்பளாரின் மற்றொரு கவனக்குறைவு காரணமாக சொண்டர்ஸ் கழகத்தின் 4ஆவது கோலை குளோவிஸ் ப்ராங்க் புகுத்தினார்.

இடைவேளைக்குப் பின்னர் 53ஆவது நிமிடத்தில் ரஹுமான் பரிமாறிய பந்தை நோக்கி வேகமாக ஓடிய விஜயகுமார் விக்னேஷ், செரெண்டிப் கழகத்தின் 2ஆவது கோலைப் போட்டார்.

அதன் பின்னர் மேலதிக கோல்கள் போடப்படாத நிலையில் சோண்டர்ஸ் கழகம் 4 – 2 என இலகுவாக வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.