போர்ச் சேதங்களுக்கு அமெரிக்கா – இஸ்ரேலிடம் நஷ்டஈடு கோரும் ஈரான்

0
3
Article Top Ad

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள், உருக்கு ஆலைகள் மற்றும் இராணுவ நிலைகள் என முக்கிய உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதில் சுமார் 270 பில்லியன் டொலர் நேரடி மற்றும் மறைமுக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் பாத்திமா மொஹாஜெரானி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈரானைத் தாக்கத் தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதித்த ஐந்து பிராந்திய நாடுகளும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என ஐ.நாவுக்கான ஈரான் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சேதங்களை ஈடுகட்ட ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விசேட வரி விதிக்கும் திட்டத்தையும் ஈரான் முன்வைத்துள்ளது.

போரினால் 20 பயணிகள் விமானங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதுடன், நாட்டின் பல சர்வதேச விமான நிலையங்களும் கடும் சேதமடைந்துள்ளன. இதேவேளை, நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் இணைய முடக்கம் காரணமாகத் தினசரி 80 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படுவதாக வர்த்தகச் சபைகள் கவலை வெளியிட்டுள்ளன.

இவ்வளவு பாதிப்புகளுக்கு மத்தியிலும், அணுசக்தி விவகாரத்திலோ அல்லது ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாட்டிலோ அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்கப் போவதில்லை என ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here