உக்ரைன் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்ட இலங்கை வீரர் போரில் உயிரிழந்தார்

0
6
Article Top Ad

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியால் “வீர சிப்பாய் பதக்கம்” வழங்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த லஹிரு காவிந்த ஹதுருசிங்க, உக்ரைனில் உள்ள போர்க்களத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் இரண்டாவது கமாண்டோ படைப்பிரிவின் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியபோது, ​​அப்பிரிவிற்குத் தெரிவிக்காமல் சேவையிலிருந்து விலகிய பின்னர் உக்ரைன் போர் களத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி சுமி பகுதியில், ரஷ்ய ஆக்கிரமிப்பாளரிடமிருந்து உக்ரைனிய நிலத்தைப் பாதுகாக்கும் பணியின் போது லஹிரு வீரமரணம் அடைந்ததாக ஊடகவியலாளர் சரோஜ் பத்திரன தனது சமூக ஊடகப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய ஜனாதிபதி அவருக்கு வீர சிப்பாய் பதக்கம் வழங்கிய பின்னர், அவர் உக்ரேனிய இராணுவத்தில்படைப்பிரிவு தளபதியாகப் பணியாற்றினார்.

முன்னர் உக்ரேனிய இராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றிய ரனிஷ் ஹெவாகே போர்க்களத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரின் உடலை, ரஷ்யத் தாக்குதலையும் மீறி ஹதுருசிங்க துணிச்சலுடன் மீட்டெடுத்திருந்தார்.

இந்நிலையில்ஹத்துருசிங்கவின் உடல், இராணுவ மரியாதைகளுக்காக உக்ரேனிய இராணுவ முகாம் ஒன்றில் வைக்கப்படிருந்தாகவும், பின்னர் உக்ரேனிய இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் விருப்பப்படி வோலின் பகுதியில் உள்ள மிலினோவ் கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஹிருவின் சொந்த விருப்பத்தின் பேரிலும், அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடனும், அவர் மிலினோவில் உள்ள தனது தளபதியும் சக போர் வீரருமான ரனிஷ் ஹெவாகேவின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரமரணம் அடைந்த லஹிருவின் இறுதிச் சடங்கு, அவரது தாய்நாடான இலங்கையில் பௌத்த மரபுகளின்படி நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் திகதி உக்ரைனின் பக்முட் பகுதியில் நடந்த ரஷ்ய இராணுவத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட சிப்பாய் எம்.எம். பிரியந்தாவின் உடலை மீட்க முயன்றபோது ரனிஷ் ஹெவாகே மற்றும் ரோட்னி ஜெயசிங்க ஆகியோர் கொல்லப்பட்டனர்.

அந்த நேரத்தில், துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த தனது நெருங்கிய நண்பரும் தளபதியுமான ரனிஷ் ஹெவாகேவை பல கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று காப்பாற்ற லஹிரு கவிந்த ஹத்துருசிங்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த லஹிரு கவிந்த, மீண்டும் போர்க்களத்திற்குத் திரும்பினார்.

அவர் 18 வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவப் பிரிவின் தளபதியாக பணியாற்றியதாகவும், உக்ரைன் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை ஆக்கிரமித்தபோது போரில் இணைந்த ஒரே இலங்கை வீரர் இவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்களத்தில் காட்டிய வீரத்திற்காக லஹிரு கவிந்த ஹத்துருசிங்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியிடமிருந்து ஜனாதிபதி விருதைப் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லஹிரு கவிந்த ஹத்துருசிங்கவுடன் உக்ரைனுடன் இணைந்த மேலும் பல இலங்கையர்கள் ஏற்கனவே போர் களத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here