
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறார் விஜய் (Vijay). “திராவிடக் கட்சிகளே தமிழக அரசியலின் நிரந்தர சக்தி” என்ற பல தசாப்த அரசியல் கணிப்புகளை உடைத்து, மக்கள் ஆதரவின் பேரலை மூலம் ஆட்சியின் உச்சிக்குச் சென்றிருப்பது இந்திய அரசியல் ஆய்வாளர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
“ஒன்று உதயசூரியன், இல்லையெனில் இரட்டை இலை” என்ற இரு துருவ அரசியல் மரபை மாற்றியமைத்து, தனித்த அரசியல் சக்தியாக தவெக உருவெடுத்திருப்பது சாதாரண தேர்தல் வெற்றியாக அல்ல; தமிழக அரசியலின் ‘பிக் பாங்’ தருணமாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் வெற்றி என்பது தொடக்கம் மட்டுமே. ஆட்சியின் முதல் நாளிலிருந்தே முதலமைச்சர் விஜய்யைச் சுற்றி நிற்கும் சவால்கள் மிகப்பெரியவை.
முக்கியமாக, கச்சத்தீவு (Katchatheevu) விவகாரம் மீண்டும் அரசியல் மையமாக மாறியுள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது மற்றும் எல்லைப் பகுதியில் உயிரிழப்புகள் இடம்பெறுவது போன்ற பிரச்சினைகள் நீண்டகாலமாகத் தீர்வின்றி உள்ளன. “கச்சதீவை மீட்போம்” என்ற அரசியல் கோஷங்களைத் தாண்டி, இலங்கையுடன் நடைமுறை அடிப்படையிலான மீன்பிடி உடன்படிக்கையை உருவாக்குவது விஜய் அரசின் முதல் பெரிய ராஜதந்திரச் சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதேபோல், தூத்துக்குடி (Thoothukudi Sterlite protests) துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி கோரும் குரல்களும் மீண்டும் வலுத்துள்ளன. போராட்டத்தின் போது உயிரிழந்த 13 பேருக்கான நீதியும், சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும் மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும், வேங்கைவயல் (Vengaivayal) குடிநீர் மாசுபாடு விவகாரம் சமூக நீதி குறித்த முக்கிய சோதனையாகவே பார்க்கப்படுகிறது. சமூக அடக்குமுறைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில், மருத்துவக் கல்வி (Medical Education) தொடர்பான NEET தேர்வு விவகாரமும் அரசின் முன் நிற்கும் பெரிய அரசியல் பிரச்சினையாக உள்ளது. தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற்றுத்தருவது குறித்து விஜய் அரசு எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது கவனிக்கப்படுகிறது.
விவசாய நிலங்களில் விமான நிலையம் மற்றும் தொழில்துறை திட்டங்கள் அமைப்பது குறித்த எதிர்ப்புகளும் புதிய அரசுக்கு சவாலாக உள்ளன. குறிப்பாக பரந்தூர் மற்றும் சேலம் பகுதிகளில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பது கேள்வியாக உள்ளது.
இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு மற்றும் பொருளாதார நிலைமை போன்ற பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்கள் நலத் திட்டங்களைத் தாண்டி, வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் ஆட்சியே தேவை என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒரு நடிகராக மக்களின் ஆதரவை வென்ற விஜய, ஆட்சியாளராக அந்த நம்பிக்கையை நிலைநிறுத்துவாரா என்பது தற்போது தமிழக அரசியலின் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.


