2024ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் களத்தில் ரொன் டிசான்டிஸ்

0
89
Article Top Ad

அடுத்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில் ஜனநாயகக்கட்சியில் அவரைத்தாண்டி வேறொருவர் வேட்பாளராக தெரிவாவது கடினம்.

இந்த நிலையில் குடியரசுக்கட்சியின் மீது கவனம் திரும்பியுள்ளது. ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

குடியரசுக்கட்சியினர் மத்தியில் அவருக்கு இன்னமும் பெரும் செல்வாக்கு உள்ளபோதிலும் அவரது வயது மற்றும் அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் குடியரசுக்கட்சியில் இருந்து வேட்பாளராவதற்கு தகுதியீட்டும் முனைப்பில் இறங்கியுள்ள ஏனையோர் மீது கவனம் திரும்பியுள்ளது.

தென் கரோலினா மாநில முன்னாள் ஆளுனர் நிக்கி ஹாலே, இளம் தொழில் முனைவர் விவேக் ராமசாமி, ஆர்கன்சாஸ் மாநில முன்னார் ஆளுநர் அஸா ஹட்சின்ஸன் , கரோலினா மாநில செனட்டர் டிம் ஸ்கொட் ஆகியோர் தாம் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்புரிமையைப் பெறுவதற்கான போட்டிக்களத்தில் இறங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் புளோரிடா மாநில ஆளுநர் ரொன் டி சான்டிஸ் தாமும் குடியரசுக்கட்சியின் சார்பில் போட்டிக்களத்தில் குதிப்பதை உறுதிசெய்துள்ளார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை முற்பகலில் இதற்கான பத்திரத்தை தாக்கல் செய்த டிசான்டிஸ் டுவிட்டர் தளத்தில் எலன் மஸ்க் உடனான உரையாடலின் போது இதனை உறுதிசெய்தார்.

44வயதுடைய ரொன் டிசான்டிஸ், முன்னாள் ஜனாதிபதிக்கு நிகரான ஆதரவுத்தளத்தை கட்சிக்குள் தற்போதைய நிலையில் கொண்டிராதபோதும் ட்ரம்பின் சிறிய வடிவமாக பார்க்கப்படுவதுடன் கணிசமான ஆதரவுத்தளத்தையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.