கறுப்பு ஜுலை நினைவுகளைக் தமிழர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்த கனேடியப் பிரதமர்

0
184
Article Top Ad

தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜுலை இனக்கலவரத்தின் 40வது ஆண்டு நினைவலைகளை தமிழ்ச்சமூகம் உலகெங்கும் நினைவுகூர்ந்துவரும் நிலையில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் வாழும் தமிழர்களைச் சந்தித்து கறுப்பு ஜுலை நினைவுகளைக் கேட்டு ஆறுதல் கூறியுள்ளார்.

லிபரல்கட்சியைச் சேர்ந்த கனேடிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் ஏற்பாட்டில் ஸ்காபுரோ நகரில் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது கறுப்பு ஜுலைக்கலவரத்தில் சேர்ந்த தமது உயிர்களைப் பலிகொடுத்தவர்களை கௌரவத்துடன் நினைவுகூர்ந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ , கனடாவிற்காக அவர்கள் ஆற்றிய மற்றும் ஆற்றிவருகின்ற முக்கியமான பங்களிப்புக்களுக்காக நன்றி கூறினார்.

கறுப்பு ஜுலை என்பது இலங்கையில் 1983 ஜுலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளைக் குறிக்கும். இப்படுகொலைகள் திட்டமிடப்பட்டு நடந்தேறியவை ஆகும். 1983 ஜுலை 23 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னணியே இப்படுகொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்தது எனக் கூறப்படாலும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிறில் மத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு விரைவில் சிங்களப் பொதுமக்கள் பங்கேற்புடன் தமிழருக்கு எதிரான வன்முறைகளாக மாறியது.

1983 ஜுலை 24 இரவு, தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது. பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஏழு நாட்களில் முக்கியமாக சிங்களக் கும்பல் தமிழரைத் தாக்கினர். உயிருடன் எரித்தனர். படுகொலைகளைப் புரிந்தனர். உடமைகளைக் கொள்ளையடித்தனர் .இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது. 150,000 பேர் வீடற்றவர்களாயினர்.ஏறத்தாழ 8,000 வீடுகளும் 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன.இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டது. பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 திசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது.