அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் இருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதற்கான சகல யோசனைகளையும் பாராளுமன்றில் சமர்ப்பிப்தற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதனையடுத்தே எதிர்வரும் புதன்கிழமையன்று உரையாற்றவுள்ளார்.
பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் இந்த விசேட உரையின் போது ஜனாதிபதி தெளிவாக குறிப்பிடவுள்ளார்.
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சர்வக்கட்சி மாநாட்டை ஜனாதிபதி நடத்தியிருந்துடன், கட்சிகளின் யோசனைகளை முன்வைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையிலேயே 13 இன் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்தாலும் பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சிகளும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் இவ்விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வராமையானது ஜனாதிபதியின் அந்த முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளது.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது புதுடில்லியில் வைத்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.