‘இலங்கையின் பொருளாதார மாற்றத்தை இந்தோ-ஜப்பானிய ஒத்துழைப்புக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாயம்’ என்ற திட்டம் நாளை வியாழக்கிழமை இந்திய தலைநகர் புதுடெல்லியில் வெளியிடப்படவுள்ளது.
பாத்ஃபைண்டர் அறக்கட்டளை (Pathfinder Foundation ), புது டெல்லியை தளமாகக் கொண்ட நாட்ஸ்ட்ராட் மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இந்திய மற்றும் ஜப்பானிய கலப்பு வடிவத்தில் நடைபெறும் என்பதுடன், சுமார் 200 முக்கிய பிரதிநிதிகளும் சில இராஜதந்திரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மூலோபாய திட்ட வெளியீட்டில், இலங்கையில் சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதோடு, அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைத் துறைகளில் உறுதியான திட்டங்கள் மற்றும் நிதியளிப்பு முறைகளை அடையாளம் காண விரும்பும் இந்திய பங்குதாரர்களுடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்க்கப்படுகிது.
இந்நிகழ்வில், பாத்ஃபைண்டர் தூதுக்குழுவின் தலைவர் பெர்னாட் குணதிலக்க மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி தயாரத்ன சில்வா ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
இலங்கையின் முதலீட்டுச் சபை மற்றும் நிலைபேண்தகு எரிசக்தி அதிகார சபையின் சார்பில் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரசஞ்சித் விஜயதிலக மற்றும் பணிப்பாளர் நாயகம் ஜே.எம். அதுல ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
கடந்த மார்ச் மாத இறுதியில் கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் ஜப்பான் தூதர் மிசுகோஷி ஹிடேகி ஆகியோர் முன்னிலையில் இத்திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கான அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்தியா மற்றும் ஜப்பானுடன் ஒத்துழைப்பதற்கான நான்கு முன்னுரிமைப் பகுதிகளை இந்த திட்ட அறிக்கை கவனம் செலுத்துகிறது.
கார்பன் மின் உற்பத்தி, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான LNG மற்றும் கிரிட் (LNG and grid connectivity) இணைப்பை உருவாக்கல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று திருகோணமலையை புதுபிக்கத்தக்க ஆற்றல் வலயமாக அபிவிருத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
திட்டத்தின் நான்காவது குறிக்கோள் சுற்றுலா, கல்வி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய மக்களிடையேயான தொடர்பை உருவாக்குவதாகும்.
நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராய 18 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியப் பிரதிநிதிகள் குழுவொன்று உருவாக்கப்பட்டதுடன், இந்த குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு முதலீட்டு வலயங்கள் குறித்து ஆய்வுகளை நடத்திவருவதுடன், இலங்கையில் உயர்மட்ட தலைவர்களுடன் முக்கிய சந்திப்புகளையும் நடத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள குழுவினர், கடந்த 4ஆம் திகதி இந்தியாவுக்கு மீள திரும்பியுள்ளதுடன், பாத்ஃபைண்டர் அறக்கட்டளைக்கு தமது ஆய்வின் முன்மொழிவுகளையும் வழங்கியுள்ளனர்.
‘இலங்கையின் பொருளாதார மாற்றத்தை ஆதரிப்பதற்கான இந்திய-ஜப்பானிய ஒத்துழைப்புக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாயம்’ என்ற அறிக்கையை கீழ் உள்ள இணைப்பில் படிக்கலாம்.
https://pathfinderfoundation.org/publications