தமிழக முதலமைச்சர் என்ற அரியாசனத்திற்கு என்றுமே வரமாட்டார் என பரிகாசிக்கப்பட்ட மு.க . ஸ்டாலின் ,இன்றையதினம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி தமிழக முதல்வராக பதவிப்பிரமாணம் செய்தபோது உணர்வுபூர்வமாக இருந்தது என்றால் மிகையல்ல .
தமிழக சட்டசபை தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.
திமுக தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைத்துள்ளது. திமுக-வின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
1967-ல் இருந்து தன்னை அரசியலில் ஈடுபட்டுத்திக் கொண்டாலும்,1996-ல் முதன்முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
அப்போது சென்னை மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் சென்னை மேயராக பதவி வகித்தார்.
2006-ல் திமுக ஆட்சியை பிடித்தபோது, அமைச்சரவையில் இடம்பிடித்தார். திமுக தலைவர் கருணாநிதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு வீல்சேரில் அமரும் நிலை ஏற்பட்டது.
அப்போது துணை முதல்வராக பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின். அப்போது மு.க. ஸ்டாலின் முதல்வராக வாய்ப்புள்ளதாக ஒரு கருத்து நிலவியது. இருந்தாலும் கருணாநிதி சிகிச்சைப்பின் முதல்வராக தொடர்ந்தார்.
2011 தமிழக சட்டசபை தேர்தலின்போது திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக தேர்தலை சந்தித்தது.
அதில் தோல்வியடைந்தது. பின்னர் 2016 தமிழக சட்டசபையை தேர்தலின்போது, முக ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கலைஞர் கருணாநிதிதான் முதல்வர் வேட்பாளராக களம் நின்றார்.
இந்த தேர்தலில் முக ஸ்டாலின் பிரசார பொறுப்பை ஏற்றுக் கொண்டு தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த தேர்தலிலும் திமுக தோல்வியைச் சந்தித்தது. அப்போது முக ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார்.
இந்தத் தேர்தலின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதிக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லை என்று மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
இதற்கிடையில் கலைஞர் கருணாநிதி உயிரோடு இருக்கும்போது முதல்வர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்திருக்கலாம் என்ற கருத்துக்களும் எழுந்தன.
தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இல்லாத திமுக-வால் இனிமேல் ஆட்சியை பிடிக்க முடியாது, ‘நான் முதலமைச்சரானால்’ என முக ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
அவருக்கு முதலமைச்சராகும் ராசி இல்லை என எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரங்களில் வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார். பல்வேறு அமைச்சர்களும் இதே கருத்தை தெரிவித்தனர்.
மக்களிடமும் முக ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் ராசியில்லை என்ற கருத்து நிலவி வந்தது.
ஆனால் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் நடந்த முதல் சட்டசபை பொதுத்தேர்தலில் சிறப்பான கூட்டணியை கட்டமைத்து, பிரசார வியூகங்களை
வகுத்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, ராசியை விட விடா முயற்சிக்கே வெற்றி கிடைக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தலில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின் இன்று முதலமைச்சராக பதவி ஏற்று, முதல்வர் அரியணையில் ஒய்யாரமாக அமர்ந்து முதல் நாளிலேயே ஐந்து முக்கிய கோப்புகளில் கையழுத்திட்டுள்ளார்.
இன்று ஸ்டாலினது அமைச்சரவையும் பதவிப்பிரமாணம் செய்யது. அதில் முதலமைச்சருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
தகுதிவாய்ந்தவர்களை தக்க பொறுப்புகளுக்கு அவர் நியமித்துள்ள்ளதாகவும் இது அவரது நிர்வாகத்திறனைக் காண்பிப்பதாகவும் ஏற்கனவே கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இதனைவிட தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் பொறுப்புக்களைக் கொடுக்காமல் விட்டதன் மூலம் வாரிசு அரசியலை திமுக
முன்னெடுக்கும் என்ற விமர்சனங்களுக்கு தற்காலிகமாகவேனும் ஸ்டாலின் பதிலளித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.