இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன ஆய்வு கப்பலான ஷி யான் 6 கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டைக்கு வரவுள்ள பின்னணியில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது திருகோணமலைக்கு பயணம் செய்யும் அவர், இரு நாடுகளையும் இணைக்கும் பெற்றோலியப் பொருட்களை மாற்றுவதற்காக குழாய் பாதையை அமைக்கும் பணியை பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2ஆம் அல்லது 3ஆம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் தலைமை பணிப்பாளரும் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சர் உட்பட இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவினருடன் தீர்மானமிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இலங்கையையும் இந்தியாவையும் தரைப்பாலத்தின் ஊடாக இணைப்பு திட்டம் உட்பட எதிர்காலத்தில் இரு நாடுகளும் நடைமுறைப்படுத்த உயர்மட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ள ஏனைய திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதும் இந்த விஜயம் முக்கிய நோக்கமாக அமையும்.
இதனிடையே, சீன ஆய்வு கப்பலான ஷி யான் 6 ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள பின்னணியில் கப்பலின் வருகைக்கு முன்னதாகவே இந்திய அமைச்சரின் இந்த வருகை திட்டமிடப்பட்டுள்ளது.
சீன கப்பலின் வருகை காரணமாக இந்திய மற்றும் இலங்கைக்கு இடையில் இராஜதந்திர ரீதியில் சிக்கல்கள் உருவாகியுள்ளது. சீன கப்பல்கள் வருகை தொடர்பில் கடந்த காலங்களிலும் இந்தியா கவலை வெளியிட்டிருந்தது.
அந்த வகையில், தற்போது இலங்கை வருவதற்கு திட்டமிட்டுள்ள சீன ஆய்வு கப்பல் குறித்தும் இந்தியா கவலை வெளியிட்டுள்ளதுடன், கப்பலின் வருகையை தவிரக்க இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் ஆய்வு கப்பலின் வருகைக்கு இலங்கையிடம் சீனா அனுமதி கோரியுள்ள நிலையில், இலங்கை இன்னும் அனுமதி வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.