விவேக்கின் இழப்பு எவ்வகையில் வெற்றிடமாகின்றது ?

அசுரன் ,கர்ணன் போன்ற படங்களில் ஆணித்தரமாக எடுத்துச்சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு வன்முறையும் தேவைப்பட்டது. ஆனால் கத்தியின்றி இரத்தமின்றி விவேக் மூன்று தசாப்தங்களுக்கு மேலான சினிமா வாழ்வில் சாதியம் உட்பட மாற்றியமைக்கப்படவேண்டிய பல சமூகக் கருத்துக்களை லாவகமாக எடுத்துக்கூறியிருந்தார் என்றால் மிகையாகாது.

0
381
Article Top Ad

ஜனங்களின் கலைஞன் சின்னக்கலைவாணர் எனப் போற்றப்படும் நடிகர் விவேக் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் தாராள பிரபு. இந்தத் திரைப்படம் வெளியாகி ஒருவருடம் கடந்துவிட்டது.

2000ம் ஆண்டில் அவரது நடிப்பில் 19 திரைப்படங்கள் ஒரேவருடத்திலேயே வெளியாகியிருந்தன. அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் விவேக்கின் திரைப்பிரசன்னம் ஏறத்தாழ இல்லாமல் போய்விட்டது என்று கூறினாலும் ஆச்சரியமில்லை.

ஆனாலும் ஏன் விவேக்கின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாக அமைகின்றது ?

உலக நாயகன் கமலஹாஸன் பார்வையில் விவேக்கின் வகிபாகம்

உலகிலேயே மூத்த மொழி என்ற பெருமைக்குரிய தமிழ் மொழிக்குரித்துடையவர்களான தமிழர்கள் உழைப்பிலே எந்தவொரு இனத்திற்கும் இரண்டாந்தரமானவர்களல்ல.

தமது கடும் உழைப்பாலும் விடாமுயற்சியாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களின் முன்னணிப் பதவிகளில் அமர்ந்திருப்பது மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் முன்னணி வகிப்பர்களாக தமிழர்கள் உள்ளனர்.

ஆனாலும் ஒட்டுமொத்த இனமாக தமிழினம் பின்தங்கியிருப்பதற்கு தமிழ் சமூகத்தில் ஆழ வேரூண்டிக்கிடக்கின்ற சாதிய அடக்குமுறைகளும் ஏற்றத்தாழ்வுகளுமே முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

இந்த சிக்கலான சமூக விடயங்களை தனது நகைச்சுவையால் அவர் எடுத்து சாதாரண மக்களும் புரியும் படியாக கூறிய விதம் காலாகாலத்திற்கும் பாராட்டப்படவேண்டியது. பரியேறும் பெருமாள் அசுரன் கர்ணன் போன்ற திரைப்படங்கள் எடுத்துக்காண்பித்த சாதிவெறியை அடக்கியாளும் சிந்தனையை தனது முற்போக்கு நகைச்சுவை மூலமாக மிக எளிமையாக எடுத்துக்காட்டிய மகத்தான பணியை விவேக் ஆற்றியிருந்தார்.

அசுரன் ,கர்ணன் போன்ற படங்களில் ஆணித்தரமாக எடுத்துச்சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு வன்முறையும் தேவைப்பட்டது. ஆனால் கத்தியின்றி இரத்தமின்றி விவேக் மூன்று தசாப்தங்களுக்கு மேலான சினிமா வாழ்வில் சாதியம் உட்பட மாற்றியமைக்கப்படவேண்டிய பல சமூகக் கருத்துக்களை லாவகமாக எடுத்துக்கூறியிருந்தார் என்றால் மிகையாகாது.

சாமி திரைப்படத்தில் ஒரு பிராமண ஐயராக இருந்துகொண்டே அந்தச் சமூகத்தினர் தாழ்த்தப்பட்டவர்களாக கருதுவோர் குறித்த சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கூறிய கருத்துக்கள் மறக்கமுடியாதவை.

விவேக் தனது 34 வருட திரைவாழ்வில் 220ற்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அந்தத்திரைப்படங்களை மீண்டும் பார்த்தால் அவற்றில் ஏதோ ஒரு சமூகக்கருத்தையேனும் அவர் விதைக்கத் தவறியிருக்கமாட்டார். கடைசியாக வெளியான தாராள பிரபு படத்தில் மருத்துவராக நடித்திருந்த விவேக் குழந்தைகளற்ற பெற்றோருக்காக விந்துக்களை தானாம் கொடுப்பது சிறந்த செயற்பாடு என்ற விடயத்தை வலியுறுத்திருந்தார். இவ்வாறு மூச்சிலும் பேச்சிலும் முற்போக்கான கருத்துக்களை விதைத்தவர் விவேக் .

 

இவற்றையெல்லாம் தாண்டி புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் பெருந்தலைவர் அப்துல் கலாமின் ஆலோசனைப்படி பெரும் மரம் நடுகை இயக்கத்திற்கு செயல்வடிவம் கொடுத்த விவேக்கின் பங்களிப்பு என்றென்றும் மறக்கமுடியாதது.

நமக்கேன் ஊர்வம்பு என ஒதுங்கிக்கொள்ளும் சமூகத்தில் விவேக்கின் முயற்சியில் மாத்திரம் 33லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டமை மகத்தான சாதனை என்றால் மிகையல்ல. விவேக்கின் இந்தப் பங்களிப்புக்கள் காலாகாலத்திற்கும் அவரது இழப்பை தமிழ் சமூகம் வெற்றிடமாக உணர்வதற்கு வழிகோலும் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.