அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கவும் கூடிய விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாமை குறித்து இந்தியா தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி இந்திராமணி பாண்டே இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவின் கருத்துப்படி, அரசியல் தீர்வின் மூலமே இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும், அது ஐக்கிய இலங்கையில் நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் இலங்கை தமிழ் சமூகத்தின் கௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.