‘2023’ பட்ஜெட் விவாதத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
68
Article Top Ad

2023 நிதியாண்டு தொடர்பாக பிரதமரால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட விவாத நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் ஆரம்ப உரையை நவம்பர் 14 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ளார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அதன்படி இரண்டாம் வாசிப்பு விவாதம் 07 நாட்கள் நடைபெறும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 08ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களைத் தவிர வாரத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் நவம்பர் 14 முதல் டிசம்பர் 08 வரை நாடாளுமன்றம் கூடும்.

வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் நாட்களில் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அவசர மருத்துவத் தேவைகள் அல்லது அரசாங்கத்தின் மிக அவசரமான வேலைகளைத் தவிர, நாடாளுமன்ற அமர்வு நாட்களிலும், வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என பிரதமர் முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.