டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்த அனுமதிக்கப்படுவாரா? முக்கிய தீர்மானம் இன்று

0
481
Article Top Ad

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஃபேஸ்புக் கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவாரா? என்பது தொடர்பான முக்கியமான தீர்மானத்தை இன்று புதன்கிழமை ஃபேஸ்புக் நிறுவனத்தின் உயர் பீடம் தீர்மானிக்கவுள்ளது.

இந்தத் தீர்மானம் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் எதிர்காலத்தில் முக்கியமான பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2024 ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கும் டொனால்ட் ட்ரம்பின் எதிர்கால அரசியலுக்கு 35 மில்லியன் பேரை அங்கத்தவர்களாக் கொண்ட அவரது ஃபேஸ்புக் கணக்கும் 24 மில்லியன் பேரை அங்கத்தவர்களாகக் கொண்ட இன்ஸ்டகிராம் கணக்கும் வலுவான அடித்தளங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க பாராளுமன்றகட்டிடமான கப்பிடல் ஹில் கட்டிடத்தை இவ்வாண்டு ஜனவரி 6ம் திகதி 45வது ஜனாதிபதியான ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்து வன்முறையில் ஈடுபட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பாக அவரது ஃபேஸ்புக் கணக்கு காலவரையறையின்றி முடக்கப்பட்டது.

ட்ரம்ப் தொடர்ந்தும் ஃபேஸ்புக்கை பயன்படுத்த அனுமதித்தால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் மிகவும் பாரதூரமானவை என நம்புவதாக அப்போது ஃபேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸக்கர்பேர்க் தெரிவித்திருந்தார்.

எனினும் ட்ரம்பின் ஃபேஸ்புக் கணக்கு தடை தொடர்பாக நீண்டகாலத் தீர்மானத்தை எடுப்பதற்கான பொறுப்பு ஃபேஸ்புக்கின் உச்ச தீர்மான பீடமான ஒவர்சைட் போர்ட்டிற்கு கையளிக்கப்பட்டது.

மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் .ஊடகவியலாளர்கள். சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் .கல்வியாளர்கள் .மதிப்பு மிக்க அரசியல்வாதிகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு இந்த தடை தொடர்பாக ஆராய்ந்து அதன் பரிந்துரைகளை இன்று முன்வைக்கவுள்ளது.

இந்த அமைப்பானது ஃபேஸ்புக்கினால் நிதியளிக்கப்படுகின்ற போதிலும் சுயாதீனமாகவே தீர்மானம் எடுக்கும் என கூறப்படுகின்றது.

இந்த அமைப்பை 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி அளித்து ஃபேஸ்புக் உருவாக்கியிருந்தை குறிப்பிடத்தக்கது.