நஷ்ட ஈட்டைப் பெறுவதற்காக X-Press Pearl கப்பலின் தீயை பரவவிட்டனரா இலங்கை அதிகாரிகள் ? வலுப்படுத்தும் நீதிமன்ற சாட்சியம்

0
318
Article Top Ad

X-Press Pearl கப்பல் தீப்பற்றி எரிந்த ஆரம்ப கட்டங்களில் அந்தத்தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அது பரவுவதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை அதிகாரிகள் இடமளித்தனர் என கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட கப்பலின் கப்டனான ரஷ்யாவைச் சேர்ந்த டுட்காலோ விடாலி சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன மேல் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

கப்பல் அனர்த்தத்தினால் ஏற்படும் சேதங்களுக்காக நஷ்ட ஈட்டைப் பெறும் எண்ணத்தில் துறைமுக அதிகார சபை அதிகாரிகள் இப்படி நடந்துகொண்டனர் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

கப்பலில் தீ பற்றியுள்ளமை குறித்து மே மாதம் 20ம் திகதி இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கப்பல் கப்டன் அறிவித்துள்ளார். இதனையடுத்து அதேநாளன்று பிற்பகல் 4.30 மணிக்கு கப்பலில் அதிகாரிகள் ஏறியுள்ளனர். சுமார் ஒரு மணிநேரம் பரிசோதனைகளில் ஈடுபட்டனர் என கப்டன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் கடற்பரப்பிற்குள் நுழையும் போது கப்பலில் அமிலக்கசிவு ஏற்பட்டுள்ள விடயத்தை இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்கு கப்பல் கப்டனும் சிப்பந்திகளும் தவறிவிட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிடர் ஜெனரல் ( பிரதி மன்றாடியார் நாயகம்) மாதவ தென்னக்கோன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

சேதமுற்று மூழ்க்கிக்கிடக்கும் கப்பல் காரணமாக அந்த வழியால் வேறு கப்பல்கள் பயணிக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்றையதினம் நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து கப்பலின் கப்டன் 2மில்லியன் ரூபா சரீரப்ப பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார். வழக்கு விசாரணை மீண்டும் ஜுலை 1ம் திகதியன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கப்பல் அனர்த்தம் தொடர்பான இலங்கையின் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை அமைப்பான NARAவின் பிரதம விஞ்ஞானி கணபதிப்பிள்ளை அருளானந்தனுடன் நடத்திய நேர்காணல் இதோ…