அரசாங்கம் தீர்மானமெடுக்காவிடின் திங்கள் முதல் பத்துநாட்கள் “கட்டாய” பொதுமுடக்கம்

0
225
Article Top Ad

கொரோனா நிலைமை மோசமடைந்துவரும் நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அரசாங்கம் பொதுமுடக்கம் பற்றிய அறிவிப்பை விடுக்கத்தவறினால் ,எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும் என பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்களும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா நிலைமை டெல்டா பரவுகையால் மிகவும் மோசடைந்துள்ள நிலையில் பொதுமுடக்கத்தை அறிவிக்குமாறு மருத்துவ சங்கங்கள் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மருத்துவ நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் விடுத்துவரும் கோரிக்கைகளை அரசாங்கம் இதுவரை நிராகரித்துவந்துள்ள நிலையிலேயே தொழிற்சங்கங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜேவிபின் முன்னாள் பாராமன்ற உறுப்பினரும் அனைத்து நிறுவன தொழிலாளர்கள் ஒன்றியத்தின் தலைவருமான வசந்த சமரசிங்க செவ்வாய்க்கிழமை மாலை ஊடகங்களிடம் கருத்துவெளியிட்டபோது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதிக்குள் அரசாங்கம் பொது முடக்கத்தை அறிவிக்கத்தவறும் பட்சத்தில் அரசாங்கத்துறை ,தனியார் துறை, தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் ஏனைய துறைகளைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை 23ம்திகதி முதல் சுயமாக கட்டாய பொதுமுடக்கத்தினை முன்னெடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.

அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கைக்கு மத்தியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 31 நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை தாமாக நிறுத்திக்கொள்வதற்கு வர்த்தக அமைப்புக்கள் தீர்மானித்துள்ளதன் பின்னணியிலேயே தொழிற்சங்கங்களின் அறிவிப்பும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது