இலங்கை ஏன் கொரோனா முடக்கத்திற்கு தாங்காது? காரணங்களை வெளியிட்டார் அமைச்சர் கப்ரால்

0
250
Article Top Ad

பொது முடக்கம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் தாங்கிக்கொள்ள முடியாத ஒருவிடயம் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் நான்கு காரணிகளை முன்வைத்துள்ளார்.

1.)பொதுமுடக்கத்தால் ஏற்படும் பாதிப்புக்களை இலங்கையின் சனத்தொகையில் அரைவாசியான மக்களால் எதிர்கொண்டு நிற்கமுடியாமை

2)4.5 மில்லியன் ( 45லட்சம் ) சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்படுகின்ற நிலை

3)பரு பொருளியளில் அடிப்படைகள் கடுமையான பாதிப்பிற்குள்ளாதல்

4)பரந்தளவிலான நீண்டகால பொருளாதார இழப்புக்களை எதிர்கொள்ள நேரிடல்

ஆகியவையே இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள நான்கு காரணிகளுமாகும்.

இலங்கையில் இதற்கு முன்னர் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது வறிய குடும்பங்களுக்கு 5000 ரூபாவை அரசாங்கம் வழங்கியது . ஆனால் இம்முறை அதனைக் கூட வழங்கமுடியாத நிலையில் மிகவும் மோசமான பொருளாதாரநிலையில் இலங்கை சிக்கித்தவிக்கின்றது.

பொருட்களில் விலைகள் கடந்த சில மாதங்களில் மிகப்பெரும் அதிகரிப்பைக் காண்பித்துள்ளபோதும் இம்முறை அரசாங்கம் 2000 ரூபாவை மாத்திரமே குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஓகஸ்ற் 30ல் முடக்கம் நீக்கப்பட்டால் அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் 1.3பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதாவது 21,000 கோடி ரூபாவாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பொதுமுடக்கத்தை செப்டம்பர் 18ம் திகதிவரை நீடித்தால் பொருளாதார தாக்கம் 1.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும்  ஒக்டோபர் 2ம் திகதிவரை பொதுமுடக்கத்தை நீடித்தால்பொருளாதார தாக்கம் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அமையும் என இந்த ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொரோனா தீவிர நிலையை எதிர்கொள்ள கடுமையான சுகாதார விதிமுறைகளை வேண்டுமானால் நடைமுறைப்படுத்தலாம் ஆனால் நாடு திறக்கப்பட்டு செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்குள் கப்ரால் போன்று பலரும் பொதுமுடக்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுவந்தாலும் நாட்டில் கொரோனா பாரதூர நிலைமையின் மத்தியில் தற்போது நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கம் எதிர்வரும் செப்டம்பர் 6ம்திகதிவரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.