சம்பந்தனின் வீட்டில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு அதிரடித் தீர்மானம்!

0
202
Article Top Ad

“கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் கூடும் தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்குபற்றும்.

ஆனால் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு தேர்தல்களில் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஊடாகத் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற விடயங்களுக்கு உட்பட்டதான ஆவணங்களில் மட்டுமே தமிழரசுக் கட்சி கையெழுத்திட வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இன்று காலையும் மாலையும் இரண்டு அமர்வுகளாக நடைபெறுகின்றன.

கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் இல்லத்தில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  முதல் அமர்வு இடம்பெற்றது.

மாலை அமர்வு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இரா.சம்பந்தன், ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, கி.துரைராஜசிங்கம், த.கலையரசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வராமையால் பொன். செல்வராசா இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவில்லை.

இதற்கிடையில் – ‘13 A யின் நடைமுறையாக்கத்துக்கான கடிதம் தொடர்பான கலந்துரையாடலும், ஒப்பமிடுதலும்’ என்ற தலைப்பில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைத்துள்ள கூட்டம் நாளை முற்பகல் கொழும்பு, வெள்ளவத்தை, மரைன் டிரைவில் உள்ள குளோபல் டவர் ஹோட்டலின், அரங்க மண்டபத்தில் நடைபெறுகின்றது.

இரா. சம்பந்தன், மனோ கணேசன், மாவை  சேனாதிராஜா, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், வே.இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், சுரேஷ் பிரேமச்சந்திரன், என். ஸ்ரீகாந்தா ஆகிய கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் நேற்றைய அரசியல் குழுக் கூட்டத்தின் காலை அமர்வில் நாளை நடைபெறும் மேற்படி தமிழ்க் கட்சிகளின் கூட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சம்பந்தனோடு சுமந்திரனும் பங்குபற்ற வேண்டும் என அரசியல் குழுவின் அனைத்து  அங்கத்தவர்களும் வலியுறுத்தினர்.

சுமந்திரனுடன்தான் மேற்படி கூட்டத்தில் வந்து தாம் பங்குபற்றுவார் என ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்கனவே தாம் அறிவித்துவிட்டார் என்றார் சம்பந்தன்.

போரின் பின்னர் கடந்த பன்னிரண்டு வருட காலத்தில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் கூட்டமைப்பாக தமிழரசின் நிலைப்பாடு தேர்தல் விஞ்ஞாபனங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கே நமது தமிழ் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் ஆணை தந்துள்ளனர்.

அந்த ஆணையைப் பிரதிபலிக்கும் விதத்தில் இன்றைய தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதில் தமிழரசுப் பிரதிநிதிகளான மாவை சேனாதிராஜாவும் மற்றும் சம்பந்தனும் கையெழுத்திட வேண்டும் என்று இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மக்களிடம் தமிழரசுக் கட்சித் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மூலம் பெற்ற ஆணைக்கு அமைவாக அந்த ஆவணத்தை ஒழுங்குபடுத்துவதை சுமந்திரன் விசேடமாகக் கவனிக்க வேண்டும் என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.